மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்த மா.சு... விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தல்!!

By manimegalai aFirst Published Oct 27, 2021, 6:15 PM IST
Highlights

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவை நேரில் சந்தித்து தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தின் மருத்துவ தேவைகள், மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த நிதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து மக்களின் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இருந்தபோதிலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக்கப்பட்டு உள்ளது.  தமிழகத்தில் நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம் மூலம் சுமார் 1.33 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தின் மருத்துவ தேவைகள் குறித்த கோரிக்கைகளை வலியுறுத்த தமிழக அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று டெல்லி சென்றார். அங்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொண்ட தமிழக அமைச்சர் மா.சுப்ரமணியன், முன்னதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவை நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது, தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளில் 850 ஆக உள்ள மாணவர் சேர்க்கை அனுமதியை ஆயிரத்து 650 ஆக உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதுமட்டுமின்றி முதலாம் தவனை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு இரண்டாவது தவனை தடுப்பூசி செலுத்த 10 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். பின்னர் தமிழகத்தில் உள்ள 19 மாவட்ட அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பையும் தரத்தையும் உயர்த்த ரூ.950 கோடி நிதி வழங்க வேண்டும் எனவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வலியுறுத்தினார். அதை தொடர்ந்து தனது கோரிக்கைகள் அனைத்தையும் மனுவாக தயார் செய்து அதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவிடம் வழங்கினார். மேற்கண்ட 3 முக்கிய கோரிக்கைகள் மட்டுமின்றி மேலும் பல முக்கிய கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார். கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!