பள்ளிக்கு மாணவர்கள் எப்படி வர வேண்டும் என கட்டுப்பாடுகள் இருப்பதாக தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கட்டுப்பாடுகளை மீறி மொபைல் போன் கொண்டு வந்தால பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
ஆசிரியர் கோரிக்கைக்கு பெட்டி
ஆசிரியர்களுடன் அன்பில் நம்மில் ஒருவர் என்ற நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குபிறகு செய்தியாளர்களிடம் பேசியவர் அவர், ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைக்காக அமைச்சர் அலுவலகம், வீடு என நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளதாக கூறினார். ஆசிரியர்கள் எனக்காக காத்திருப்பது வேதனையாக இருப்பதாக கூறியவர், எனவே இதை கருத்தில் கொண்டு தான் தலைமை செயலகத்தில் உள்ள அறைக்கு முன்பாகவும், முகாம் அலுவலகமாக வீட்டிலும் ஆசிரியர் மனசு என்கின்ற பெட்டியானது வைக்கப்பட இருப்பதாக தெரிவித்தார். எனவே ஆசிரியர்கள் அந்த பெட்டியில் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை போடலாம் என கூறினார். அதற்கென தனி அதிகாரி நியமித்து தீர்வு காணப்படும் என தெரிவித்தார். தேவைப்பட்டால் நானே தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆசிரியர்களிடம் பேசி அவர்களது கோரிக்கைக்கு தீர்வு ஏற்படுத்தப்படும் என கூறினார். பள்ளிக்கு வரும் பொழுது மாணவர்கள் எப்படி வர வேண்டும் என்று ஏற்கனவே நடைமுறை உள்ளதாக கூறினார்.பள்ளிக்கு செல்போன் கொண்டுவரக் கூடாது, முடியை சரியான முறையில் வெட்டி வர வேண்டும், உடைகள் எப்படி அணிய வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் ஏற்கனவே உள்ளதாக தெரிவித்தார்.
செல்போன் கொண்டுவந்தால் நடவடிக்கை
எனவே கட்டுப்பாடுகளை மீறி மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். மாணவர்களுக்கு மதிப்பெண்கள் குறைவு தொடர்பாக தற்கொலை செய்து கொள்வது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அனிபில் மகேஷ், மதிப்பெண்கள் மட்டுமே மாணவர்களின் திறமையை மதிப்பீடு செய்யாது என கூறினார். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை தான் முக்கியம், தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடக்கூடாது என தெரிவித்தார், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக உடனடியாக மறு தேர்வு நடத்தப்பட்டு வருவதாக கூறினார். ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கும் இடையே முன்பே போல் தற்போது உறவுகள் இல்லையென வேதனைப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதனை தெரிவிக்கும் வகையில், தனியாக தொலைபேசி எண்ணும் வெளியிட்டுள்ளதாக கூறினார். மேலும் மாணவர் மனசு என்கின்ற ஒரு பெட்டியானது வைக்கப்பட்டுள்ளது என்றும் அதிலுள்ள கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என கூறினார்.
ஆசிரியர் -மாணவர் உறவு
முன்பு காலத்தில் ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் கண்ணை மட்டும் விட்டு விட்டு தோலை உரியுங்கள் என கூறுவார்கள், எங்களுக்கு பிள்ளை படித்தால் போதும் என தெரிவித்தார்கள். ஆனால் இன்று மாணவர்கள் சென்சிட்டிவாக மாறியுள்ளதாக கூறினார். எனவே மாணவர்களுக்கு புரியும் வண்ணம் பாடம் நடத்த வேண்டும் என கூறியவர், பாடல் பாடியோ, கதை சொல்லியோ பாடம் நடத்துவதாக இருந்தாலும் அதற்க்கு தகுந்த மாதிரி ஆசிரியர்களும் மாறிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என தெரிவித்தார். அந்த காலத்தில் எப்படி ஆசிரியருக்கும்,மாணவர்களுக்கும் இடையே உறவு முறை இருந்ததோ அதே போல் மீண்டும் இருக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோளாக உள்ளதாக அன்பில் மகேஷ் கூறினார்.
இதையும் படியுங்கள்
பேனாவுக்கு ரூ.80 கோடி... பேனாவுக்கு மை நிரப்ப வருடா வருடம் எத்தனை கோடி...! ஸ்டாலினை அலறவிட்ட பாஜக