அ.தி.மு.க. கட்சி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அவை முடிந்த பின்னர் விரிவாக பதில் அளிப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் கடிதம் குறித்த கேள்விக்கு அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்ற இபிஎஸ்
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவு உபச்சார விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்து அடைந்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் டெல்லி அசோகா ஹோட்டலில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் கலந்து கொண்டார். இதையடுத்து புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரவுபதி முர்முவை அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து டெல்லியில் உள்ள பொதிகை தமிழ்நாடு அரசு இல்லத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,
எடப்பாடி பழனிச்சாமி பதவியே செல்லாது.. மகனை காக்க மக்களவை சபாநாயகருக்கு ஓபிஎஸ் எழுதிய கடிதம்!
நீதிமன்றத்தில் அதிமுக கட்சி வழக்கு
குடியரசுத் தலைவர் ராமநாதன் கோவிந்த் பிரிவு உபச்சார விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின் பேரில் டெல்லி வந்தேன் என கூறினார். அதேவேளையில், அ.தி.மு.க. வங்கிக் கணக்கை முடக்க வேண்டுமென ரிசர்வ் வங்கிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, கட்சி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இந்த கேள்விகளுக்கு தற்போது பதில் கூற இயலாது எனவும் எனவே இந்த கேள்விகளை செய்தியாளர்கள் தயவுகூர்ந்து தவிர்க்க வேண்டும் என கேட்டுக கொண்டார். ஆனால் நீதிமன்ற வழக்குகள் முடிந்த பின்னர் விரிவாக பதிலளிப்பேன் எனவும் ஈ.பி.எஸ். தெரிவித்தார். இந்தநிலையில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை தனியாக சந்திக்க நேரம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பிரதமர் அலுவலகமோ அனுமதி கொடுக்கவில்லையென்று தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமையை பாஜக மேலிடம் விரும்பவில்லையென்றே தெரிகிறது. ஓபிஎஸ், இபிஎஸ்,சசிகலா ஆகியோர் ஒன்றினைந்த அதிமுக இருந்தால் மட்டுமே நாடாளுமன்ற தேர்தலில் சாதகமான முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறது. இந்தநிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள 3 பிளவுகள் மோடி மற்றும் அமித்ஷாவை கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே கூறப்படுகிறது.
மோடியை சந்திக்காத இபிஎஸ்
5 நாட்கள் டெல்லியில் தங்கி குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க திட்டமிட்டிருந்த இபிஎஸ் இன்று காலை திடீரென சென்னை திரும்பியுள்ளார். பாஜக மேலிடத்தில் இபிஎஸ் மேல் அதிருப்தி காரணமாகவே முன் கூட்டியே சென்னை திரும்பியதாக கூறப்படுகிறது. மேலும் குட்கா முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்ய மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளதும், அதிமுக வங்கி கணக்குகளை முடக்க கோரி ரிசர்வ் வங்கிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியதும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை எடப்பாடி பழனிசாமி தரப்பு மறுத்துள்ளது. தமிழக அரசை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காகத்தான் இபிஎஸ் சென்னை திரும்பியதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்
ஓபிஎஸ்யின் தேனி மாவட்ட ஆதரவாளர் சையது கான்...! திடீரென டிடிவியோடு சந்திப்பு..? என்ன காரணம் தெரியுமா?