தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மதிமுக எம்.பி. சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த நிலையில், அவரது மறைவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினரும், இளமைக் காலம் தொட்டு தியாக வேங்கையாக என்னோடு பயணம் செய்த ஆருயிர் சகோதரர் அ.கணேசமூர்த்தி அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு ஆராத் துயரமும், அளவிட முடியா வேதனையும் அடைந்தேன்.
சென்னை தியாகராயர் கல்லூரியில் படித்த காலத்தில் மாணவர் அணியில் இணைந்து தி.மு.கழகத்தை வளர்த்தெடுக்க என்னோடு பாடுபட்ட காலங்கள் பசுமையாக இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. ஆதிக்க இந்தியை வேரோடு சாய்ப்பதற்காக ஆண்டு 65 இல் மாணவர் சேனை நடத்திய எழுச்சி மிகு போராட்டத்தில் என்னோடு களம் கண்ட வீர வேங்கைதான் சகோதரர் கணேசமூர்த்தி.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மலர்ந்த நேரத்தில் தி.மு.கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்த அவர் என்னோடு கைகோர்த்துக் கொண்டு கழகத்தை தொடங்கவும், வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லவும் முனைப்புடன் செயலாற்றிய செயல் வீரர்தான் சகோதரர் கணேசமூர்த்தி.
ஈரோடு மாவட்டக் கழகச் செயலாளராக, கழகத்தின் பொருளாளராக - சட்டமன்ற உறுப்பினராக - நாடாளுமன்ற உறுப்பினராக பாராட்டத் தக்க வகையில் பணியாற்றியது மட்டுமல்ல, பொடா சட்டத்தில் என்னோடு 19 மாத காலம் சிறைவாசம் ஏற்ற கொள்கை மறவர்தான் சகோதரர் கணேசமூர்த்தி.
ஈரோடு மாநகரில், அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களையும், அனைத்திந்தியத் தலைவர்களையும் அழைத்து எழுச்சியுடன் நடத்திய மாபெரும் மாநாடு, கழகத்தின் பொதுக்குழு கூட்டங்கள், பொதுவாழ்வில் பொன்விழா கண்ட என்னை பாராட்டிப் பெருமைப்படுத்திய மாநாடு என எண்ணற்ற நிகழ்ச்சிகளை நடத்தியவர். கொங்குச் சீமையில் திராவிட இயக்கம் வேரூன்ற அரும்பணி ஆற்றிய பெருமைக்குரியவர்தான் சகோதரர் கணேசமூர்த்தி.
கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற போது, “தமிழ்நாடே என் தாய்நாடு” என்று முழக்கமிட்டு பதவி ஏற்ற நிகழ்வு நம் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும். கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்துத் தரப்பினராலும் பாராட்டத்தக்க பொதுவாழ்க்கையை நடத்தி, மறுமலர்ச்சி தி.மு.கழகத்திற்கு பெருமை சேர்த்தவர் சகோதரர் கணேசமூர்த்தி.
100 நாள் வேலை திட்டத்துக்கான ஊதியம் உயர்வு!
எதிர்பாரா சூழலில் துயர முடிவை மேற்கொண்டு, கோவை மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியுடனும், பதற்றத்துடனும் சென்றேன். அவரது மகன் கபிலன், மகள் தமிழ்ப்பிரியா ஆகியோரைச் சந்தித்து ஆறுதலை தெரிவித்தேன். மருத்துவர்களிடம் கணேசமூர்த்திக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விசாரித்தேன்.
“இதுமாதிரியான நிலையில், ஏற்கனவே பலரை பிழைக்க வைத்திருக்கிறோம். அதற்குரிய உபகரணங்கள் மருத்துவமனையில் உள்ளது. அவற்றைப் பயன்படுத்தி சிகிச்சை எடுக்கும்போதும் இரத்த அழுத்தம் குறைவதால் அவரை செடேசன் என்ற மயக்க மருந்தில் வைத்திருக்கிறோம். விஷ முறிவுக்கான சிகிச்சையும், எக்கோவும் கொடுக்கப்படுகிறது. ஆதலால் நம்பிக்கையோடு காத்திருப்போம்” என்று மருத்துவர்கள் கூறியதைக் கேட்டு எப்படியும் சகோதரர் கணேசமூர்த்தி உயிர் பிழைத்துக் கொள்வார் என்ற நம்பிக்கையுடன்தான் நான் அங்கிருந்து புறப்பட்டு வந்தேன்.
ஆனால் முடிவுகள் வேறாகவிட்டன. கல்லூரி காலம் தொட்டு கொள்கை உணர்வோடு பழகிய அன்புச் சகோதரரை - மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் கொங்குச் சீமையின் கொள்கைக் காவலரை இழந்த பெரும் துயரில் கண்ணீர் வடிக்கிறேன். அவரது பிரிவால் கண்ணீரில் தத்தளிக்கும் குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் கண்ணின் மணிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.