மக்களவை தேர்தலில் போட்டியிட எம். பி சீட் கிடைக்காதல் தற்கொலை முடிவு எடுத்தார் என்பதில் துளி கூட உண்மை இல்லையென தெரிவித்த வைகோ என்னை நட்டாற்றில் விட்டு விட்டு போவது போல செல்வார் என நினைக்கவில்லையென கண்ணீர் மல்க தெரிவித்தார்.
மதிமுக எம்பி தற்கொலை
மதிமுக மக்களவை உறுப்பினர் கணேஷமூர்த்தி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து முதல் உதவி சிகிச்சைக்கு பிறகு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை சேர்த்தனர். அப்போது கணேஷமூர்த்திக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வைகோ கோவை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நானும், கணேசமூர்த்தியும் ஒருவருக்கு ஒருவர் உயிருக்கு உயிராக பழகினோம், கொள்கை பிடிப்புடன் இருந்தவர், 2 சீட்டுகள் திமுக கூட்டணியில் கொடுத்தால் துரையும் நானும் நிற்கிறோம் என தெரிவித்தார். ஒரு சீட்டு என்றால் துரையே நிற்கட்டும் என கூறினார். கொங்கு மண்டலத்தின் சிங்கமாக இருந்தவர் இப்படி ஒரு முடிவுக்கு வருவார் என நினைக்கவில்லை. ஒரு இடி விழுந்தது போல இருக்கிறது என தெரிவித்த வைகோ, ( நா தழு தழுக்க கணேசமூர்த்தி பற்றி பேசினார்)
சீட் கிடைக்காததால் தற்கொலையா.?
தொடர்ந்து பேசிய அவர் மக்களவை தேர்தலில் போட்டியிட எம். பி சீட் கிடைக்காதல் இப்படி முடிவு எடுத்தார் என்பதில் துளி கூட உண்மை இல்லை, என்னை நட்டாற்றில் விட்டு விட்டு போவது போல செல்வார் என நினைக்கவில்லை. அவர் மறைந்த செய்தி என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மன உறுதி கொண்டவர் மருந்து குடித்தார் என்பதை நம்ப முடியவில்லை. திராவிட இயக்கத்தின் அழியா நட்சத்திரமாக இருப்பார் கணேசமூர்த்தி, தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட் கொடுப்பது தொடர்பான விஷயத்தில் மகிழ்ச்சியாகவே தான் இருந்தார்.
திமுக கூட்டணியில் எந்த இடம் என்ற அறிவிப்பிற்கு பிறகும் அவர் என்னுடன் நன்றாகவே பேசிக் கொண்டிருந்தார். அவரது மன உளைச்சலுக்கான காரணம் அவரது குடும்பத்தினர் மற்றும் மாவட்ட செயலாளரிடம் கேட்டால்தான் உண்மை தெரியும். சீட் கிடைக்காத வருத்தத்தில் தான் அவர் இவ்வாறு செய்து கொண்டார் என ஏடுகளில் வந்ததில் ஒரு விழுக்காடு கூட உண்மை இல்லையென வைகோ தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்