திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தை 20 நகர் பகுதிகளைச் சேர்ந்த திரளான மக்கள் முற்றுகை... ஏன்?

First Published May 16, 2018, 9:30 AM IST
Highlights
massive population siege of 20 towns in Tiruvallur Collectorate office


திருவள்ளூர்
 
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தை 20 நகர் பகுதிகளைச் சேர்ந்த திரளான மக்கள் முற்றுகையிட்டனர். சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்துள்ளதை அகற்ற கோரி ஆட்சியரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று திருவள்ளூரை அடுத்த மணவாளநகர், ஒண்டிக்குப்பம், கணேசபுரம், கபிலர் நகர், ஜெல்லிமேடு, கே.கே.நகர், வரலட்சுமிநகர், சண்முகபத்மாவதி நகர் போன்ற 20 நகர் பகுதிகளைச் சேர்ந்த திரளான மக்கள் முற்றுகையிட்டனர். 

கண்டன முழக்கங்களை எழுப்பி போராடிய அவர்கள், "நாங்கள் மேற்கண்ட பகுதியில் மூன்று தலைமுறையாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் இறப்பு ஏற்படும் சமயத்தில் கூவம் ஆற்றங்கரையோரம் மயான நிலத்தில் உடலை அடக்கம் செய்தும், எரித்தும் வருகிறோம்.

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் சுடுகாட்டுக்கு செல்லும் வழியை மறித்து சுற்றுச்சுவர் எழுப்பி உள்ளனர். இதனால் நாங்கள் இறப்பு ஏற்படும் சமயத்தில் உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு செல்லமுடியாமல் வழியை மறித்து விட்டார்கள். இதனால் நாங்கள் இறந்தவரின் உடலை அடக்கம் செய்யமுடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். 

எனவே, மேற்கண்ட பகுதியில் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்து அவற்றை அகற்றி சுடுகாட்டிற்கு செல்ல வழிவகை செய்து தரவேண்டும்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லியிடம் கொடுத்தனர். அந்த மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் அதன்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 

click me!