இரு பழங்குடியின பெண்களை, பல ஆண்கள் நடுத்தெருவில் ஆடைகள் இன்றி நிர்வாணமாக அழைத்து சென்ற வீடியோ காண்போர் நெஞ்சை உலுக்கியுள்ளது
கடந்த இரண்டு மாத காலமாகவே மணிப்பூரில் நடந்து வரும் சம்பவங்கள் இந்தியா மட்டுமல்லாமல், உலகையே கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. அங்கு வெடித்துள்ள வன்முறையால் இதுவரை நூற்றுக்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் இறந்துள்ளனர். மணிப்பூரில் அரங்கேறும் கொடூரங்களின் உச்சமாக நேற்று இணையத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவியது.
அந்த வீடியோவில் மணிபூரை சேர்ந்த இரு பழங்குடியின பெண்களை, பல ஆண்கள் நடுத்தெருவில் ஆடைகள் இன்றி நிர்வாணமாக அழைத்து சென்ற வீடியோ காண்போர் நெஞ்சை உலுக்கியுள்ளது என்று தான் கூற வேண்டும். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தற்போது இது குறித்த ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் "பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில், குக்கி என்னும் பழங்குடியின பெண்கள் இருவர், பெரும்பான்மை மைதேவி சமூகத்தை சேர்ந்தவர்களால் ஆடையின்றி சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு அதிர்ச்சியையும் கடும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.
"ஒரு பழங்குடி பெண்ணை இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஆக்கிவிட்டதாக பெருமை பேசிக்கொள்ளும் பாஜக அரசு இரண்டு பழங்குடியின பெண்களுக்கு நிகழ்த்தப்பட்டுள்ள மனசாட்சியற்ற அநீதிக்கு என்ன பதில் கூறப்போகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அங்கே நிர்வாணமாக்கப்பட்டது அந்த பழங்குடியின பெண்களல்ல அது நம் பாரதத்தாய்" என்றும் கடும் கோபத்துடன் சீமான் அவர்கள் பேசி உள்ளார்.
"பழங்குடியின மக்களுக்கு எதிராக தொடர்ந்து கட்டுக்கடங்காத கலவரம் நடைபெற்று வரும் மணிபூர் மாநிலத்தில் உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.