கருணாநிதிக்கு இடம் தரலென்னா அவ்வளவுதான்! ஃபேஸ்புக்கில் முதல்வரை மிரட்டியவர் கைது...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 14, 2018, 1:09 PM IST
Highlights

முகநூலில் முதல்வர் மற்றும் கல்வி அமைச்சரை மிரட்டிய திருப்பூரைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் தரலென்னா கொங்கு மண்டலத்திற்குள் நுழைய முடியாது என்று முகநூலில் முதல்வர் மற்றும் கல்வி அமைச்சரை மிரட்டிய திருப்பூரைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 7-ஆம் தேதி மாலை 6.10 மணியளவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி இயற்கை எய்தினார். அவரை மெரீனாவில் அடக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், முதல்வர் பதவியில் இல்லாதவருக்கு இடம் தர முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மறுத்திவிட்டார்.

இதனையடுத்து நீதிமன்றத்தை நாடியது தி.மு.க. அவசர அவசரமாக விசாரித்து கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கியது நீதிமன்றம். இதற்கு தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நீதிமன்ற உத்தரவின்படியே மெரீனாவில் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்டார். இதில் பல்லாயிரக்கணக்கில் தொண்டர்கள் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த தருணத்தில் கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் தர மறுத்த அ.தி.மு.க. அரசையும், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் குறித்தும் முகநூலில் அவதூறாக பதிவிட்டார் ஒருவர். மேலும், கருணாநிதிக்கு இடம் தராவிட்டால் கொங்கு மண்டலத்திற்குள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் நுழைய முடியாது என்று பகிரங்க மிரட்டல் விடுத்தார். 

இந்தப் பதிவுகளை முகநூலில் ஆயிரக்கணக்கானோர் பார்த்தனர். பலர் இதற்கு எதிர்ப்பும், பலர் இதற்கு ஆதரவும் தெரிவித்தனர். இதனைப் பார்த்த அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்து அவதூறாக பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். அதன்படி, தென்னம்பாளையத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் கணேஷன் (58) திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த நபர் பதிவிட்ட பதிவுகளையும் காவலாளர்களிடம் காண்பித்தனர்.

இந்தப் புகாரின்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து முகநூல் முகவரியை வைத்து அந்த நபர் குறித்து விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில் திருப்பூர் தென்னம்பாளையம் காலனியைச் சேர்ந்த கனகசுந்தரம் (35) என்பவரை காவலாளர்கள் கைது செய்தனர். முகநூலில் முதல்வர் மற்றும் கல்வி அமைச்சருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தவரை நீதிமன்றம் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

click me!