
சிறுமியை கடித்த நாய்
சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக ரகு என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சோனியா மற்றும் 5 வயது மகள் சுதக் ஷாவும் பூங்கா உள்ள ஒரு சிறு அறையில் ஒன்றாக வசித்து வருகிறார்கள். நேற்று உறவினர் ஒருவர் இறந்ததாக கூறி காவலாளி ரகு விழுப்புரம் சென்றுள்ளார்.
பூங்காவில் சோனியாவும் 5 வயது மகள் சுதக் ஷாவும் மட்டும் இருந்துள்ளனர். இதனிடையே நேற்று மாலை பூங்கா அருகே வசிக்ககூடிய புகழேந்தி என்பவர் தான் வளர்க்கும் இரண்டு நாய் உடன் பூங்காவிற்கு வந்துள்ளார். இரண்டு நாயை கயிறு கட்டி அழைத்து வராமல் இருந்துள்ளார். மேலும் நாயின் வாய் பகுதிக்கு எந்த ஒரு பாதுகாப்பு கவசமும் அணியாமலும் இருந்துள்ளது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி
அப்போது பூங்கா உள்ளே விளையாடி கொண்டு இருந்த காவலாளி மகள் சுதக் ஷாவை இரண்டு நாய்களும் கடுமையாக கடித்துள்ளது. குழந்தையின் அழுக்குரல் கேட்டு வந்த தாய் சோனியா வெறி பிடித்த இரண்டு நாய்களிடம் இருந்து தனது குழந்தையை காப்பாற்றி உள்ளார். அப்போது அவரது தாய் சோனியாவையும் இரண்டு நாய்களும் கடித்துள்ளது. இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த நாயின் உரிமையாளர் நாயை அங்கே விட்டுவிட்டு சென்றுள்ளார். இரண்டு வெறி நாய் கடித்ததில் தலையில் பயங்கர காயத்துடன் இரத்த வெள்ளத்தில் அந்த குழந்தையை அருகில் இருந்தவர்கள் மீட்டு இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆயிரம் விளக்கு போலீஸார் புகழேந்தியை விசாரணைக்கு ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
நாய் உரிமையாளர் கைது
நாயின் உரிமையாளரை காவல்துறையினர் காப்பற்ற பார்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். தற்பொழுது அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள தீவிர அவரச பிரிவில் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே நாயின் உரிமையாளர் புகழேந்தியை ஆயிரம் விளக்கு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாயின் உரிமையாளர் புகழேந்தி மற்றும் அவருடைய மனைவி வரலட்சுமி மற்றும் மகன் வெங்கடேஷன் ஆகிய மூன்று பேரின் மீதும் ஆயிரம் விளக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். பிறரை கடித்து அல்லது தீங்கு விளைவித்தால் மற்றும் மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.