மதுரை – சென்னை இடையே நாளை முதல் நவீன தேஜஸ் ரயில் !! சூப்பர் சொகுசு எக்ஸ்பிரஸ் !!

By Selvanayagam PFirst Published Feb 28, 2019, 7:28 AM IST
Highlights

மதுரை-சென்னை  இடையே அதிநவீன சொகுசு தேஜஸ் ரெயில் நாளை முதல் இயக்கப்படுகிறது. ஆறரை மணி நேரத்தில் பயணம் செய்யும் வகையில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து சென்னைக்கு பகல்நேர அதிநவீன சொகுசு தேஜஸ் ரெயில் இயக்கப்படுவதாக கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, ரெயில் பெட்டிகள் அனைத்தும் தயாரான நிலையில், ரெயில் இயக்கப்படும் தேதி தெரியாமல் அதிகாரிகள் மற்றும் பயணிகள் தரப்பில் குழப்பம் நிலவி வந்தது.

இந்தநிலையில் நாளை முதல் தேஜஸ் ரெயில் இயக்கப்படவுள்ளது. இதற்காக ஏற்பாடுகளை மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் செய்துள்ளனர். 


அதன்படி, மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் கொடைரோடு ரெயில்நிலையம், திருச்சி ரெயில்நிலையம் ஆகிய 2 நிறுத்தங்களில் மட்டும் நின்று செல்லும். இரவு 9.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரெயில் மதுரை ரெயில் நிலையத்துக்கு மதியம் 12.30 மணிக்கு வந்தடையும். இந்த ரெயில் வியாழக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயக்கப்படும்.

இந்த ரெயிலில் மதுரையில் இருந்து சென்னைக்கு உட்காரும் இருக்கை கட்டணமாக ரூ.900, எக்சிகியூடிவ் வகுப்புக்கு ரூ.1,915 வரை வசூலிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஆனால், இதுவரை கட்டணம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மதுரையில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 7 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் ஏற்கனவே  இயக்கப்படுகிறது.

மதியம் 12.30 மணிக்கு குருவாயூர், தூத்துக்குடி- சென்னை இணைப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து காலை 10.45 மணிக்கு மதுரை-பிகானீர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வியாழக்கிழமை தோறும் இயக்கப்பட உள்ளது.

தற்போது, தேஜஸ் ரெயில் மாலை 3 மணிக்கு இயக்கப்பட உள்ளது. அதாவது, மதுரையில் இருந்து 4 பகல்நேர ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

click me!