Kanimozhi Election Campaign : தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து எம்.பி கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார்.
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி நல்முனை சாலை சந்திப்பு பகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, ஆயிரக்கணக்கான மக்களை மத்தியில், தேர்தல் பரப்புரை மேற்கொண்டு, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளைச் சேகரித்தார். இதில், கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: இந்த கூட்டத்தையும், உங்கள் அனைவரையும் பார்க்கும் போது நமது வேட்பாளர் ஈஸ்வரசாமி வெற்றி பெறுவார் என்று தெரிகிறது. இந்த தேர்தல் என்பது மிகவும் முக்கியமான ஒன்று, இது மீண்டும் மேற்கொள்ள உள்ள சுதந்திரப் போராட்டம், அதிமுக பாஜக வேட்பாளர்கள் உங்களைச் சந்தித்து வாக்குகள் கேட்கும் பொழுது அவர்களிடம் விவசாய மக்களுக்காக நீங்கள் செய்தது என்ன என்று கேளுங்கள்.
வேளாண் மசோதாவை கொண்டு வந்து விவசாய மக்களை பாதிப்படையச் செய்தது ஒன்றிய பாஜக அதற்கு ஆதரவாக வாக்களித்தது அதிமுக, அதேபோல குடியுரிமை திருத்தச் சட்டமும். தொழிலாளர்கள் மட்டுமல்ல அனைவருக்கும்மான ஆட்சியாக நம் முதலமைச்சரின் ஆட்சியாக உள்ளது. நீங்கள் கேட்டதை எல்லாம் செய்து கொடுக்கிறார்கள் என்று போராடாமல் இருக்காதீர்கள், தொழிலாளர்கள் என்றால் போராட வேண்டும் என்று சொன்ன ஒரே முதலமைச்சர் கலைஞர். அவர் வழியில் நம் திமுக தலைவர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி.
ஆனால் ஒன்றியத்தில் உள்ள பாஜகவின் அரசு மக்களுக்கான அரசு அல்ல, அதானி அம்பானி அவர்களின், அவர்களுக்கான அரசு. நாம் ஒரு ரூபாய் நிதியாக வழங்கினால் ஒன்றிய அரசு நமக்கு 26 பைசாவாக திரும்பி அளிக்கிறது. ஆனால் உத்திரபிரதேசத்திற்கு இரட்டிப்பாக 2.20 பைசா வழங்குகிறது.
நாம் தேர்தல் வாக்குறுதியில் அளித்து போல, மகளிர் அனைவருக்கும் மாதம் ரூபாய் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று, சொன்னதைச் செய்து காட்டி 1.15 லட்சம் மகளிர்கள் திட்ட மூலம் பயன் பெற்று வருகின்றனர். மேலும் தேர்தல் முடிந்த பிறகு இதர மகளிருக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். நாம் நினைக்கும் நியாயமான ஆட்சி ஒன்றியத்தில் அமைந்தால் மக்களுக்கான அனைத்து நலத்திட்டங்கள் அமைக்கப்படும்.
இந்தியா கூட்டணியின் ஆட்சி ஒன்றியத்தில் அமைந்தால் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும், விவசாயக் கடன் ரத்து செய்யப்படும் எனக் கலைஞர் அறிவித்தது போல விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும், நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.
சமையல் எரிவாயுவிற்கு மானியம் வழங்குவதாக மோடி தெரிவித்தார் ஆனால் இதுவரை யாருக்கும் மானியம் வழங்கவில்லை, அவர் ஆட்சி பொறுப்பேற்ற பொழுது சமையல் எரிவாயுவின் விலை 410 ரூபாயாக இருந்தது, தற்பொழுது 1050 விற்கப்படுகிறது.
நாம் ஆட்சிக்கு வந்தவுடன், சமையல் எரிவாயு 500 ஆகவும், பெட்ரோல் 75 ரூபாய்க்கும், டீசல் 65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும். தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வந்து சட்டப்படி ஊழல் செய்து கொண்டுள்ள கட்சி பாஜக, நடு இரவில் வீட்டிற்குள் புகுந்து கழுத்தில் கத்தி வைத்துக்கொண்டு திருடுவது போல, நள்ளிரவில் அமலாக்கத் துறை அல்லது வருமான வரித்துறை மூலம் சோதனை நடத்தி, அவர்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியாகப் பெற்றுக் கொள்கின்றனர். அதே அவர்கள் பாஜகவில் சேர்ந்தால் அவர்கள் வைத்துள்ள பெரிய சலவை இயந்திரத்தில் போட்டு அவர்களை வெள்ளை ஆக மாற்றி விடுகின்றனர்.
அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறைகளின் 90% வழக்குகள் எதிர்க்கட்சியினர் மீது பாஜக போட்டுள்ளது. நமது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு இன்னமும் ஜாமின் வழங்கவில்லை.
உங்கள் சின்னம் உதயசூரியன், கலைஞரின் சின்னம் உதயசூரியன் நம் தலைவர் தளபதியின் சின்னம் உதயசூரியன், வரும் 19ஆம் தேதி உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து நமது வேட்பாளர் ஈஸ்வரசாமி வெற்றி பெறச் செய்ய வேண்டும், நாடும் நமதே நாற்பதும் நமதே எனத் தெரிவித்தார்.
மிஸ்டர் செல்லாக்காசு: பிரதமர் மோடியை விமர்சித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!