CM Stalin Election Campaign : நேற்று விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார் முதல்வர் ஸ்டாலின்.
அதன் விவரம் வருமாறு:
வள்ளல் மலையமானின் மண்ணான விழுப்புரத்திற்கு வந்திருக்கிறேன்! இந்தியா கூட்டணியின் பிரதமர், டெல்லி செங்கோட்டையில் கொடியேற்ற டேவிட் கோட்டை இருக்கும் கடலூரில் ஆதரவு கேட்க வந்திருக்கிறேன். விழுப்புரம், திருச்சிற்றம்பலத்தில் - நியோ டைடல் பார்க்; கடலூர், முத்துநகரில் - நூறு கோடி ரூபாய் மதிப்பில் மீன்பிடி துறைமுகம் புனரமைப்பு என பல்வேறு திட்டங்களை இரண்டு மாவட்டங்களுக்கும் கடந்த 3 வருடமாக செய்த - செய்யப்போகும் பெருமையோடு உங்களிடம் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.
விழுப்புரம் - கடலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கும் அனைவருக்கும் என் மாலை வணக்கம்! மக்கள் கடல் சூழ்ந்த மாபெரும் மாநாடுபோல் கூடியிருக்கும் இந்தக் கூட்டத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் உயர்கல்வித் துறை அமைச்சர் - ஆளுநருக்கு மாநில உரிமைகள் பற்றிப், பாடம் எடுக்கும் பேராசிரியர் முனைவர் பொன்முடி அவர்களுக்கும், எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மஸ்தான், கணேசன் உள்ளிட்ட மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கும் – நிர்வாகிகளுக்கும் – என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்!
நமது பாசத்திற்குரிய சகோதரர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர் முனைவர் ரவிக்குமார் அவர்கள் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், எழுத்தாளர் – பத்திரிகையாளர் – அரசியல் விமர்சகர் – கவிஞர் – களப்போராளி - மொழிபெயர்ப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினராக மிகச்சிறப்பாக செயல்படுபவர். அவருக்கு, நீங்கள் பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்? டெல்லி நீதிமன்றம் கேள்வி!
கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சகோதரர் விஷ்ணுபிரசாத் அவர்கள் போட்டியிடுகிறார். இவர் சட்டமன்ற உறுப்பினராக - நாடாளுமன்ற உறுப்பினராகச் சிறப்பாக பணியாற்றி, தன்னுடைய வாதங்களை அனைத்துத் தளங்களிலும் வலுவாக எடுத்து வைக்கக் கூடியவர். கடலூர் தொகுதி மக்கள் இவருக்குக் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவர்கள் இரண்டு பேரும் மீண்டும் நாடாளுமன்றத்தில் உங்களின் குரலாக ஒலிக்க - தமிழ்நாட்டின் குரலாக ஒலிக்க அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். வெற்றி பெற வைக்கத் தயாராகிவிட்டீர்களா? நீங்கள் வாக்களிப்பது மட்டுமல்ல, இந்த ஸ்டாலினின் தூதுவனாக - உங்கள் பகுதியில் இருக்கும் மக்களிடமும் வாக்கு கேட்க வேண்டும். கேட்பீர்களா? அதற்குப் பிறகு என்ன - வெற்றி உறுதி! வேட்பாளர்கள் உட்காருங்கள்!
நான் பங்கேற்கும் அனைத்துக் கூட்டங்களிலும் சொல்கிறேன். இந்தத் தேர்தல் இரண்டாவது விடுதலைப் போராட்டம்! ஏன் என்றால், இன்றைக்கு நாடு மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கிறது! பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட – பட்டியலின – பழங்குடியின – சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்திருக்கிறது. ஆபத்து என்றால், எப்படிப்பட்ட ஆபத்து? உதாரணத்திற்கு இரண்டு மட்டும் சொல்கிறேன்.
நாட்டை நிர்வகிக்கும், ஒன்றிய அரசு செயலாளர்களில் 3 விழுக்காடு கூட பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் இல்லை! அதேபோல், ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இருக்கும் பேராசிரியர் – உதவிப் பேராசிரியர் போன்ற பணிகளில் – இப்போதும் இதர பிறப்படுத்தப்பட்ட சமூகங்களையும் – பட்டியலின – பழங்குடியின சமூகங்களையும் சேர்ந்தவர்கள் இடஒதுக்கீடு முறையில் தேர்வாவது இல்லை! இதைப் பற்றி, எதிரில் கூடியிருக்கும் நீங்கள் சிந்தித்தாக வேண்டும்! உங்களில் பலரும் இப்போது படித்திருப்பீர்கள். ஆனால், உங்கள் அப்பா–அம்மா, அவர்களின் அப்பா-அம்மாவைப் பற்றி யோசித்துப் பாருங்கள்! எதிர்காலத்தில், உங்கள் குழந்தைகள் படிக்க வேண்டாமா? நல்ல வேலைக்குச் செல்ல வேண்டாமா? கடந்த இரண்டு, மூன்று தலைமுறையாகத்தான் நாம் படித்து முன்னேறி வருகிறோம். நல்ல மரியாதையான வேலைகளுக்கு வந்திருக்கிறோம்.
இதற்கு என்ன காரணம்? நாங்கள் போராடிப் பெற்ற இடஒதுக்கீடும்; சமூகநீதியும்தான்! இன்னும் நமக்கான பிரதிநிதித்துவம் சரியாக – முழுமையாக கிடைக்கவில்லை. அதற்கு யார் காரணம்? பா.ஜ.க.! இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து உண்டாக்குகிறார்கள், ஏன்? ஒவ்வொருமுறையும் “இடஒதுக்கீடு எங்கள் உரிமை” என்று போராட வேண்டியிருக்கிறது, ஏன்? ஏன் என்றால், ஒதுக்கீட்டிற்கும், சமூகநீதிக்கும் முற்றிலும் எதிரான கட்சி, பா.ஜ.க! பா.ஜ.க. மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் இடஒதுக்கீடு முறை இருக்காது! சமூகநீதிக்குச் சவக்குழி தோண்டிவிடுவார்கள்! நம்முடைய மக்களை, நூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள்! இதற்காகத்தான் நாம் பா.ஜ.க.வை எதிர்க்கிறோம்!
இடஒதுக்கீடு கிடைக்க நாங்கள் ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து போராடுகிறோம்… தி.மு.க. ஆட்சி என்பதே, சாமானிய மக்களுக்கான ஆட்சிதான்! பேரறிஞர் அண்ணா – தலைவர் கலைஞர் வழியில், திராவிட மாடல் என்ற பெயரில், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினான நானும் சாமானியர்களுக்கான ஆட்சியைத்தான் நடத்தி வருகிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் தன்னுடைய வாழ்க்கையையே சமூகநீதிக்காக அர்ப்பணித்தவர்! அவர் முதல், இரண்டு முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோதுதான், முதன்முதலாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை - ஆதிதிராவிடர் நலத்துறை என்ற புதிய துறையையே ஒடுக்கப்பட்ட மக்கள் பயனடையத் தனித் தனியாக உருவாக்கினார். பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான சட்டநாதன் ஆணையத்தை அமைத்தார். பிற்படுத்தப்பட்டோர் 25 விழுக்காடு இடஒதுக்கீட்டை 31 விழுக்காடாக உயர்த்தினார். ஆதிதிராவிட சமூகத்திற்கான 16 விழுக்காடு இடஒதுக்கீட்டை 18 விழுக்காடாக வழங்கினார். மூன்றாவது முறை முதலமைச்சராக இருக்கும்போதுதான், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடும் – பழங்குடியின மக்களுக்கு 1 விழுக்காடு இடஒதுக்கீடும் வழங்கி, இப்போது தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு இருக்கக் காரணமாக இருப்பவர் நம்முடைய தலைவர் கலைஞர். இங்கு மட்டுமல்ல, மண்டல் கமிசன் மூலம், ஒன்றியத்தில் இடஒதுக்கீடு வழங்கவும் காரணமானார். இப்படி, ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் ஒளியேற்றி – ஒட்டுமொத்த நாட்டிற்கே சமூகநீதிப் பாதையை காட்டியவர்தான் நம் தலைவர் கலைஞர் அவர்கள்!
அந்தப் பாதையில் நாடு தொடர்ந்து, நடைபோட வேண்டும் என்றுதான், திராவிட முன்னேற்ற கழகம் முன்னெடுப்பில், அகில இந்திய அளவில் சமூகநீதி மேல் உண்மையான அக்கறை உள்ள இயக்கங்களை – அரசியல் கட்சிகளை இணைத்து – அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பை உருவாக்கினோம். அந்தக் கூட்டமைப்பு மூலமாக கூட்டங்களை நடத்தி, சமூகநீதிக்காக இந்தியா முழுவதும் உரக்கப் பேசினோம்… மற்ற இயக்கங்களையும் பேச வைத்தோம்.
இப்போது நம்முடைய முழக்கம் – தேசிய இயக்கங்களில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது... நம்முடைய கோரிக்கையை ஏற்று, காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், அருமைச் சகோதரர் ராகுல் காந்தி என்ன அறிவித்திருக்கிறார்…
”இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், நாடு முழுவதும் சமூக – பொருளாதார - சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும். ஒன்றியத்தில் இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 விழுக்காடு என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும். SC, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும். SC, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரண்டு மடங்கு ஆக்கப்படும் என்று” அறிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை – நம்முடைய நாட்டைப் படுகுழியில் தள்ளிய பா.ஜ.க.விடமிருந்து மீட்கும் தேர்தல் அறிக்கை! நூறாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல பா.ஜ.க. தீட்டியிருக்கும் திட்டங்களுக்குத் தடைபோடும் தேர்தல் அறிக்கை! இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டுபோய் மீண்டும் வளர்ச்சியை ஏற்படுத்த இருக்கும் தேர்தல் அறிக்கை! பா.ஜ.க. இதுபோல வாக்குறுதி கொடுத்திருக்கிறதா?
அதனால்தான், நான் உங்களைச் சந்திக்கும்போதெல்லாம் - இது மிக மிக முக்கியமான தேர்தல் என்று சொல்லிக்கொண்டு வருகிறேன். இது, இந்திய ஜனநாயகத்தை மீட்கும் தேர்தல்! சர்வாதிகாரத்தை விரட்டியடிக்கும் தேர்தல்! சமத்துவம் - சகோதரத்துவம் - மத நல்லிணக்கம் – நம்முடைய உயிர்மூச்சான சமூகநீதிக் கொள்கை ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டிய தேர்தல்! சமூகநீதியை நிலைநாட்டப் போராடும் நமக்கும் - சமூக அநீதியை இழைத்து வரும் பா.ஜ.க. கூட்டணிக்கும் நடக்கும் தேர்தல்! மொத்தத்தில் இந்தியாவைப் பாதுகாக்க இந்தியா கூட்டணியை உறுதியாக வெற்றிபெறச் செய்ய வேண்டிய தேர்தல்!
நம்முடைய நாட்டை மத – இன – சாதி - மொழி அடிப்படையில் பிளவுபடுத்தி இடஒதுக்கீட்டை இரத்து செய்யப் பத்தாண்டுகால ஆட்சியில் எல்லாவற்றையும் செய்தது மோடி அரசு! தமிழ்நாட்டுக்கு ஒரு சிறப்பு திட்டத்தைக்கூட கொடுக்காமல் வஞ்சித்தது மோடி அரசு! சாதிவாரிக் கணக்கெடுப்பு கூடாது என்று சொல்லும் கட்சி, பா.ஜ.க. அந்தக் கட்சிக்கு பல்லக்கு தூக்குவது யார்? பெருமதிப்பிற்குரிய அய்யா ராமதாஸ் அவர்கள்! தன்னுடைய உயிர் என்று அவர் சொல்லிக் கொள்ளும் சமூகநீதி கொள்கைக்குப் பரம எதிரியான பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்து, அவர்களுடைய வேட்பாளர்களையும் பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் போற்றிப் புகழ்கிறாரே! சில நாட்களுக்கு முன்பு வரை என்ன சொன்னார்? மோடி ஆட்சிக்கு எவ்வளவு மதிப்பெண் கொடுக்க வேண்டும் என்று ஒரு பேட்டியில் அய்யா ராமதாஸிடம் நிருபர் கேள்வி கேட்டபோது, “சைபருக்கும் கீழ் ஒன்றும் இல்லை! இருந்தால், அதைதான் கொடுப்பேன்” என்று சொல்லி, பா.ஜ.க.வைக் கடுமையாக விமர்சித்தார். ஆனால், இப்போது அவர்களோடு கூட்டணி வைத்திருக்கிறார்? இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணியின் ரகசியம் அவருக்கு மட்டும்தான் தெரியும் என்று நினைக்கிறார்… யாமறியேன் பராபரமே! ஆனால்… அவரைவிட உங்களுக்கு நன்றாகத் தெரியும்! அதனால், இதைப் பற்றி விளக்கமாகப் பேச விரும்பவில்லை!
திராவிட முன்னேற்றக் கழகத்திற்குச் சமூகநீதி என்பது உயிர்மூச்சான கொள்கை! அதனால்தான், ஒரு கொள்கைக் கூட்டணியை அமைத்து, அதனுடைய வெற்றிக்காக இங்கு மேடையில் இருக்கும் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்க வந்திருக்கிறேன்.
அமையவுள்ள இந்தியா கூட்டணி அரசு, நிச்சயம் சமூகநீதி அரசாக இருக்கும்! அந்த அரசில் நாங்கள் நிறைவேற்றப்போகும் சாதனைகளைத் தேர்தல் அறிக்கையாகக் கொடுத்திருக்கிறோம். அதில் முக்கியமான சில வாக்குறுதிகளைப் பட்டியலிட விரும்புகிறேன்.
பத்தாண்டுகளாகச் சாமானிய மக்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று சிறிதும் நினைத்துப் பார்க்காமல், மக்கள் விரோத பா.ஜ.க. அரசால் தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்!
சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும்! தொழிலாளர் விரோத சட்டங்கள், மறுசீரமைப்பு செய்யப்படும்! ஜி.எஸ்.டி. சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்படும்! விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளிலும் - வங்கிகளிலும் வாங்கியிருக்கும் கடனும் – வட்டியும் தள்ளுபடி செய்யப்படும்!
உழவர்களின் வேளாண் விளைபொருட்களுக்கு மொத்த உற்பத்திச் செலவுடன் ஐம்பது விழுக்காடு என்பதை வலியுறுத்தி குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்! தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச் சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்! மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து, 150 நாட்களாகவும் - ஊதியம் 400 ரூபாயாகவும் உயர்த்தப்படும்!
மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்! வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்! சாதிவாரிக் கணக்கெடுப்பும், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்கள் குறித்த கணக்கெடுப்பும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே நேரத்தில் ஒன்றிய அரசால் எடுக்கப்படும்! முந்திரி ஏற்றுமதியாளர்களுக்கு, ஒன்றிய ஏற்றுமதி ஊக்கத்தொகை ஐந்து விழுக்காடு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்!
பழைய முந்திரி மரங்களை அகற்றி, அதிக மகசூல் தரும் புதிய வகை முந்திரிக் கன்றுகள் மானியத்துடன் வழங்கிட ஆவன செய்யப்படும்! பெண்ணாடம் இரயில் நிலையத்தைத் தரம் உயர்த்தி, தென்பகுதி மற்றும் சென்னைக்குச் செல்லும் அனைத்து வகை இரயில்களும் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்படும்!
திண்டிவனம் முதல் நகரி வரையிலான புதிய இரயில் பாதைத் திட்டத்தில் ஆரணி நிலையத்தில் இருந்து ஒண்ணுபுரம் இணைப்புப் பாதையையும் – காஞ்சிபுரம் முதல் செய்யாறு இணைப்புப் பாதையையும் சேர்க்க வழிவகை செய்யப்படும்!
விழுப்புரத்தில் இருந்து காட்பாடி இடையே இருவழி இரயில் பாதை அமைக்கப்படும்! உளுந்தூர்பேட்டை – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பாதூர் கிராமத்துக்குச் செல்லும் வழியில் புதிய இரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்! உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட நகர்ப்பகுதி இரயில் நிலையத்தில் ஒரு விரைவு இரயிலாவது நின்று செல்ல ஆவன செய்யப்படும்!
சென்னை - பாண்டிச்சேரி பேசஞ்சர் இரயில் விக்கிரவாண்டி இரயில் நிலையத்தில் நின்று செல்ல வழிவகை செய்யப்படும்!தேஜஸ் விரைவு இரயில் விழுப்புரத்தில் நின்று செல்ல ஆவன செய்யப்படும்! இப்படி அனைத்து மக்களுக்குமான வாக்குறுதிகளை வழங்கி, அவற்றை நிறைவேற்றும் அரசாக, இந்தியா கூட்டணி அரசு நிச்சயம் அமையும்! இந்தியாவுக்கு வழிகாட்டும் நம்முடைய திராவிட மாடல் அரசில் பல்வேறு சாதனைகளைச் செய்துகொண்டு இருக்கிறோம்.
தந்தை பெரியார் பிறந்தநாளை - சமூகநீதி நாளாகவும், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை - சமத்துவ நாளாகவும் அறிவித்தோம்! ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையத்தைப் புதுப்பித்து – தொடர்க்கூட்டங்கள் நடத்தி – அந்த மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறோம்! சென்னையில் திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதருக்குச் சிலையுடன் கூடிய மணிமண்டபம்; அவர் பெயரிலான அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
இதே விழுப்புரத்தில் இருக்கும் கொழுவாரி சமத்துவபுரத்தை ஒரு ஆதிதிராவிடச் சகோதரியின் கைகளால்தான் திறந்து வைத்தேன். பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, வளர்ச்சித் திட்டங்களுக்கு முறையாகச் செலவழிக்கப்படுவதைக் கண்காணிக்க - ”தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல்திட்ட சட்டம்” கொண்டுவந்துள்ளோம்!
இப்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களைக் கல்வி, பொருளாதார மற்றும் சமூக நிலைகளில் உயர்த்த அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு கவனத்துடன் மேற்கொண்டு வருகிறது. இந்த நேரத்தில் இன்னொரு முக்கியமான சம்பவத்தை நினைவூட்ட விரும்புகிறேன்… வன்னியர் சமுதாய மக்கள் 1987-ஆம் ஆண்டை மறந்திருக்க மாட்டார்கள்! தனி இடஒதுக்கீடு கேட்டு கடுமையான போராட்டம் நடந்த ஆண்டு அது! ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் தனி இடஒதுக்கீடு கொடுக்கவில்லை! தலைவர் கலைஞர் முதலமைச்சரானதும், வன்னியர் சமூகம் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கினார். இந்த முப்பதாண்டு காலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை சேர்ந்த குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றிய இடஒதுக்கீடுதான் அது! வன்னியர் சங்கத்தினர்மேல் போடப்பட்டிருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றார் தலைவர் கலைஞர்!
1987 போராட்டத்தில் உயிரிழந்த 21 பேர் குடும்பத்திற்கு, மூன்று இலட்ச ரூபாய் கருணைத் தொகை கொடுத்தவர் தலைவர் கலைஞர். இன்றைக்கும் அந்தக் குடும்பங்கள் மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் பெறுகிறார்கள். சமூகநீதித் தியாகிகளான அவங்களைப் போற்றி மணிமண்டபம் கட்டப்படும் என்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நான் வாக்குறுதி கொடுத்தேன். இன்றைக்கு விழுப்புரத்தில் அந்த மணிமண்டபம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது! அதுமட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடிகளில் ஒருவரான – ஏ.ஜி. என்று அன்புடன் அழைக்கப்பட்டவருமான ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்து, இப்போது மணிமண்டபம் அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது! இப்படி சமூகநீதியையும் நோக்கி சமத்துவத்தை நோக்கி நம்முடைய அரசு செயல்படுகிறது. அதுமட்டுமல்ல, இப்படி பார்த்துப் பார்த்து திட்டங்களை நிறைவேற்றும் நல்லாட்சியை வழங்கி வருகிறோம்!
பல்வேறு மாநிலங்களில் இருந்து, குழுக்கள் வந்து பார்த்து, நம்முடைய திட்டங்களை அவர்கள் மாநிலங்களுக்குக் கொண்டு போகிறார்கள்… இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மட்டுமல்ல – நம்முடைய திட்டம் ஒன்று – கனடா நாட்டிலேயே இப்போதுதான் செயல்படுத்தப்படுகிறது. என்ன திட்டம் அது? செய்திகளில் பார்த்தீர்களா… முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்தான், இப்போது கனடா நாட்டிலும் எதிரொலித்திருக்கிறது. பெருந்தலைவர் காமராசர் மதிய உணவுத் திட்டத்தை, தொடங்குவதற்குக் காரணம், மதிய சாப்பாடு கொடுத்தாலாவாவது, பள்ளிகளுக்குப் பிள்ளைகள் படிக்க வருவார்கள் என்று நிறைவேற்றினார்! நானும் ஒரு பள்ளி நிகழ்ச்சிக்கு செல்லும்போது, எதார்த்தமாகக் காலை உணவு சாப்பிட்டீர்களா என்று ஒரு மாணவியிடம் கேட்டபோது, அப்பா-அம்மா வேலைக்குச் செல்வதால் டிபன் செய்யவில்லை என்று சொன்னவுடன், அதிகாரிகளை அழைத்து, எவ்வளவு நிதிநெருக்கடி இருந்தாலும் பரவாயில்லை. நம்முடைய குழந்தைகள் நன்றாகச் சாப்பிட்டு, நன்றாகப் படிக்கக் காலை உணவுத் திட்டம் கொண்டு வர வேண்டும், ஃபைல் தயார் செய்யுங்கள் என்று சொல்லி, இந்த ஸ்டாலின் போட்ட கையெழுத்தால்தான், தமிழ்நாடு முழுவதும் தினமும் 16 இலட்சம் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் சாப்பிடுகிறார்கள்!
இப்படி, பள்ளிக் குழந்தைகள் முதல் கல்லூரிக்குச் செல்லும் மாணவ – மாணவிகள் வரை, பயன்பெறும் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம். நம்முடைய திட்டங்களால் ஒவ்வொரு மகளிரும் - ஒவ்வொரு மாணவியும் - ஒவ்வொரு மாணவனும் - ஏன், தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் பயனடைகிறார்கள் என்று நெஞ்சை நிமிர்த்தி பெருமையுடன் சொல்வேன்!
இரண்டு நாள் முன்பு, ஒரு வீடியோ பார்த்தேன். தி.மு.க.விற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் உடன்பிறப்பு ஒருவர், நிறைய பெண்களிடம் மாதா மாதம் உரிமைத் தொகை வருகிறதா என்று கேட்கிறார்கள். அடுத்து, முதல் மாதம் அந்தப் பணத்தில் என்ன செய்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். ஒரு சகோதரி, உரிமைத் தொகையாக வரும் ஆயிரம் ரூபாயை என் மகளின் எதிர்காலத்திற்காகச் செல்வ மகள் திட்டத்தில் சேமிக்கிறேன் என்று சொன்னார். இப்படி, தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 15 இலட்சம் சகோதரிகள் உரிமையுடனும், பாசத்துடனும் எங்கள் அண்ணன் ஸ்டாலின் கொடுக்கும், தாய்வீட்டுச் சீர் இருக்கிறது என்று சொல்கிறார்கள்! மகளிர் அனைவரும் இந்த உரிமைத் தொகையைத் தங்களின் குழந்தைகளுக்கான சேமிப்பாகவும்; தங்கள் குடும்பத்திற்குத் தேவையான கல்வி - மருத்துவச் செலவுகளுக்கான ஆதாரமாகவும் பார்க்கிறார்கள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், நம்முடைய சகோதரிகளிடம் சென்று சேரும் உரிமைத் தொகை, நம்முடைய கிராமப்புற பொருளாதாரம் வளர – உதவிகரமாக இருப்பதாக பல்வேறு பொருளாதார அறிஞர்கள் ஆய்வுகள் மூலமாகச் சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு கிராமத்தில் ஐந்நூறு பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வருகிறது என்றால் அந்த ஊருக்குள் ஐந்து இலட்சம் ரூபாய் வருகிறது என்று பொருள். இதன் மூலமாக அந்தக் கிராமத்தில் பணப்புழக்கம் அதிகமாகிறது. கிராமப் பொருளாதாரமும் வளர்கிறது! ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், மகளிர் வாழ்வில் மட்டுமல்ல – கிராமப்புறப் பொருளாதாரத்திலும் ஒரு மிகப்பெரிய புரட்சி! இப்படிப்பட்ட புரட்சிகளால் கோடிக்கணக்கான தாய்மார்கள் முகத்தில் புன்னகையையும் - கோடிக்கணக்கான தமிழ்நாட்டு குடும்பங்களில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம் என்று நெஞ்சை நிமிர்த்திப் பெருமையோடு தெம்போடு துணிவோடு நான் உங்களிடத்தில் சொல்வேன்.
ஆனால், நம்முடைய ஆட்சியைக் குறைசொல்லி ஒருவர் பேசிக்கொண்டு இருக்கிறார்… அவருக்கு ஊரில் வைத்திருக்கும் பெயர், பாதம்தாங்கி பழனிசாமி! பச்சைப்பொய் பழனிசாமி! பச்சைத்துரோகம் பழனிசாமி! தன்னுடைய எஜமானருக்கே போட்டியாக பழனிசாமியும் உருட்டுகிறார்... பழனிசாமி என்ன சொல்கிறார் தெரியுமா? அவர் சொல்லித்தான், நாங்கள் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை கொடுக்கிறோமாம்! இவர் கஜானாவைத் தூர்வாரிய லட்சணத்தை சீர்படுத்தி – உரிமைத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
உரிமைத்தொகையை நாம் அறிவித்ததும் என்னவெல்லாம் பேசினார் இந்த பழனிசாமி? தி.மு.க. கொடுக்க மாட்டார்கள். ஏமாற்றிவிடுவார்கள் என்று பிரச்சாரம் செய்தார்… இப்போது வெட்கமே இல்லாமல் பொய் பேசுகிறார்… பழனிசாமி பேசுவதைப் பார்த்தால்… ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார், ”ஒரு மனுஷன் பொய் பேசலாம்… ஆனால், ஏக்கர் கணக்கில் பேசக்கூடாது!” என்று அந்த காமெடிதான் என் ஞாபகத்திற்கு வருகிறது! பொய்யின் முழு உருவமாக இருக்கும் பழனிசாமி அவர்களே… எத்தனை ஆண்டுகளானாலும் ”உரிமைத் தொகையை ஸ்டாலின் அண்ணன்தான் கொடுத்தார்” என்றுதான் தமிழ்நாட்டு மகளிர் சொல்வார்கள்.
பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணி வைத்துக் கொண்டு, உத்தமபுத்திரன் போன்று ஊர்வலம் சென்று வாய்க்கு வந்தபடி புலம்பும் பழனிசாமியின் லட்சணம் என்ன? மோடி இந்தியாவைச் சீரழித்தார் என்றால், தமிழ்நாட்டைச் சீரழித்த பாவத்தை செய்தவர் பழனிசாமி! பழனிசாமி ஆட்சிதான், தமிழ்நாட்டின் இருண்ட காலம். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த பாவத்தைச் செய்தவர் பழனிசாமி! கொடநாடு கொலை - கொள்ளை - தற்கொலை நடந்த ஆட்சியை நடத்தியவர்! பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை வேடிக்கை பார்த்து, குற்றவாளிகளைப் பாதுகாத்தவர்! இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப் பொருட்களைத் தமிழ்நாட்டுக்குள் பழனிசாமி ஆட்சிதான் அனுமதித்தது. அமைச்சர் மற்றும் டி.ஜி.பி. மீது சி.பி.ஐ. வழக்கு போட்டதும் பழனிசாமி ஆட்சியில்தான்! பெண் எஸ்.பி.க்குப் பாலியல் வன்முறை நடந்தபோது, அதை வேடிக்கை பார்த்தவர் பழனிசாமிதான்! சட்டம்–ஒழுங்கு என்பதே இல்லாமல், ஒட்டுமொத்த நிர்வாக இயந்திரமும் முடங்கிய ஆட்சியை நடத்தியவர்! தான் பதவிசுகம் அனுபவிக்க தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்து, அடிமை சேவகம் செய்தவர் பழனிசாமி! நான்கு ஆண்டுகளாக ஒன்றுமே செய்யாமல் அனைத்துத் துறைகளிலும், தமிழ்நாட்டை அதலபாதாளத்தில் தள்ளியவர் பழனிசாமி!
நான் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடனே… ஒவ்வொரு துறையாக ஆய்வு செய்தேன்… அந்தக் கோப்புகளைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது… அறிவிப்புகளை வெளியிட்டதுடன் சரி… அந்த அறிவிப்புகளுக்கான அரசாணைகூட போடாமல் அம்போ என்று விட்டுவிட்டு சென்றிருந்தார் பழனிசாமி! ஒரு அரசு நிர்வாகம் எப்படி இருக்கக் கூடாது – எப்படி அலங்கோலமாகச் செயல்படக் கூடாது – என்பதற்கு எடுத்துக்காட்டுதான், பாதம்தாங்கி பழனிசாமியின் நான்காண்டுகால ஆட்சி!
அ.தி.மு.க. ஆட்சியில் சீரழிந்த நிர்வாகத்தைச் சீர்திருத்த, பல அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதாயிற்று! கோட்டையில் இருந்து மட்டும் ஆய்வுக் கூட்டங்களை நடத்தினால் போதாது – ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படி, மாவட்டந்தோறும் ஆய்வுகளை நடத்தினேன்.
இது ஒருபக்கம் என்றால், அரசு கஜானாவைத் தூர்வாரிவிட்டார். நிதிநிலைமையைச் சரி செய்யவே ஒரு கமிட்டி போட்டேன்… அதுவும் சாதாரண கமிட்டி இல்லை… இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில், பொருளாதார அறிஞர்களின் குழுவை அமைத்தேன். இப்படியெல்லாம், அடுத்தடுத்து பல தொடர் நடவடிக்கைகளை எடுத்து - ஆய்வுகளை செய்து – பழனிசாமியின் நிர்வாகச் சீர்கேட்டைக் களைந்து, இன்று மற்ற மாநிலங்கள் மட்டுமல்ல – உலக நாடுகள் பலவும் கவனிக்கும் - சாதனைகளை செய்துகொண்டு இருக்கிறோம்.
பழனிசாமி தமிழ்நாட்டை மட்டும் அடகு வைக்கவில்லை; அ.தி.மு.க.வையும் சேர்த்துதான் அடகு வைத்திருக்கிறார். அதனால், தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல - உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களும் பழனிசாமியை நம்பத் தயாராக இல்லை! இதுவரை நடந்த தேர்தல்களில் எல்லாம் தோற்ற பழனிசாமி, இந்தத் தேர்தலிலும் தோற்கத்தான் போகிறார். ஆனால், இப்போதுகூட, பா.ஜ.க.வின் கள்ளக்கூட்டணி வைத்துக்கொண்டு, கூட்டணி இல்லை என்று விழுந்து புரண்டு நடிக்கிறார். உங்கள் நடிப்பு ஒருபோதும் எடுபடாது பாதம்தாங்கி பழனிசாமி அவர்களே…
நேற்று செய்திகளில் பிரதமர் வருகையைப் பற்றிப் பார்த்திருப்பீர்கள். தமிழ்நாட்டை வெள்ளம் – புயல் தாக்கியபோது எட்டிக்கூட பார்க்காத மோடி அவர்கள் – தமிழ்நாட்டிற்கான நிவாரண நிதி கொடுக்க மனம் வராத மோடி அவர்கள் – தேர்தல் வருகிறது என்று ஏற்கனவே நான்கு முறை வந்தார். இப்போது இன்னும் நான்கு முறை வரப் போகிறாராம்! தமிழ்நாட்டு மக்களுக்குத் தமிழில் வணக்கம் சொன்னால்போதும்.. வேட்டி கட்டினால் போதும்.
இட்லி பிடிக்கும்… பொங்கல் பிடிக்கும் என்று சொன்னால்போதும் என்று நினைத்துக் கொண்டு வருகிறார் பிரதமர் மோடி! மக்களுக்குத் தேவையான நேரத்தில் உதவி செய்பவர்களைத்தான் மக்கள் நினைத்துப் பார்ப்பார்கள். மக்களை மதிக்கவில்லை என்றால், அவர்களும் மதிக்க மாட்டார்கள்! மாண்புமிகு மோடி அவர்களே... மீண்டும் மீண்டும் நீங்கள் எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் தமிழ்நாட்டை பா.ஜ.க. கைப்பற்றவே முடியாது. இது பெரியார் மண்! பேரறிஞர் அண்ணாவின் மண்! தலைவர் கலைஞருடைய மண்! திமுக இருக்கும்வரை உங்கள் எண்ணம் பலிக்கவே பலிக்காது!
பாஜகவினருக்கு அதிகார போதை: டி.ஆர்.பி.ராஜா சாடல்!
மக்களுக்கு நன்கு தெரியும். தமிழ்நாட்டின் பொற்காலம் என்பது, தி.மு.க. ஆட்சிதான்! தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் பெருகியது தி.மு.க. ஆட்சியில்தான்! தமிழ்நாட்டின் கல்வி அறிவு உயர்வுக்கு வித்திட்டது தி.மு.க. ஆட்சிதான்! தமிழ்நாட்டிற்கு எண்ணற்ற முத்திரைத் திட்டங்களை நிறைவேற்றியது தி.மு.க. ஆட்சியில்தான்! இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது தி.மு.க. ஆட்சிதான். மாவட்டந்தோறும் தொழிற்சாலைகளைக் கொண்டு வந்து வளர்ச்சிக்கு வழிவகுப்பதும் தி.மு.க. ஆட்சிதான்! இந்த திராவிட மாடல் ஆட்சி, தில்லியிலும் இந்தியா கூட்டணி மூலமாக எதிரொலிக்க வேண்டும். ஏன் என்றால், பா.ஜ.க. வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு!
சமீபத்தில் மரியாதைக்குரிய ப.சிதம்பரம் அவர்கள் ஒரு தொலைக்காட்சியில் அளித்த பேட்டியைப் பார்த்தேன், நீங்களும் பார்த்திருப்பீர்கள். பா.ஜ.க.வுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது என்று அவர் சொன்ன கருத்துகளை வழிமொழிந்து, நான் கூடுதலாகச் சொல்கிறேன்… பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களித்தால், நாடெங்கும் மதவெறி ஊட்டப்பட்டு, எங்குப் பார்த்தாலும் மதக்கலவரம் என்ற நிலைமை உருவாகும். மக்களைப் பிளவுப்படுத்தி வேற்றுமைகளும் - அடிமைத்தனமும் நிறைந்த சமூகத்தை மீண்டும் உருவாக்க அரசியல்சட்டத்தை மாற்றுவார்கள்.
படிப்பதால்தான் இவர்கள் உரிமைகளைக் கேட்கிறார்கள் என்று கல்வியை நம்மிடம் இருந்து பறிப்பார்கள். மக்களைச் சிந்திக்க விடாமல் தடுக்க வரலாற்றை, பொய்களால் மாற்றி எழுதுவார்கள். மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து – மாநிலங்களை நகராட்சிகள் போன்று நடத்துவார்கள்… மாநிலங்களில் இருக்கும் மக்கள், சிறிய பிரச்சினைக்குக்கூட ஒன்றிய அரசை எதிர்பார்த்து நிற்கும் நிலைமை உருவாகிவிடும்! மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, ஆளுநர்கள் மூலமாக செயல்படவிடாமல் தடுத்து, போட்டி அரசாங்கம் நடத்துவார்கள்.
சொந்தங்களாக வாழும் இஸ்லாமிய – கிறிஸ்துவர்களை, இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றி, அவர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பார்கள். ஒரே நாடு – ஒரே கலாச்சாரம் – ஒரே மொழி – ஒரே மதம் – ஒரே தேர்தல் – ஒரே ரேஷன் கார்டு – ஒரே உணவு – ஒரே அரசு – ஒரே கட்சி – ஒரே தலைவர் என்று ஒரே ஒரே - என்று ஒரேயடியாக நாட்டை நாசமாக்கிவிடுவார்கள்! பா.ஜ.க.வின் திட்டங்கள் மிக மிக மோசமானது!
இந்த விடுதலைப் போரில் இந்திய மக்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், எதிரிகளை அடையாளம் காண்பது மட்டுமல்ல – துரோகிகளையும் சேர்த்தே அடையாளம் காண வேண்டும்! எதிரிகளையும் - துரோகிகளையும் விரட்டியடிக்க வேண்டும்! பா.ஜ.க.வுக்கு சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் தக்க பாடம் புகட்ட வேண்டும்!
எனவே, தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க. – அதற்குத் துணைபோகும் பா.ம.க. - தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அ.தி.மு.க. – ஆகிய துரோகிக் கட்சிகளை ஒருசேர வீழ்த்துங்கள்! விழுப்புரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் போட்டியிடும் முனைவர். ரவிக்குமார் அவர்களுக்குப் பானை சின்னத்திலும் - கடலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் விஷ்ணு பிரசாத் அவர்களுக்கு கை சின்னத்திலும் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் வாக்கு, இந்தியாவைக் காப்பாற்றும் வாக்காக அமையட்டும். தமிழ்நாட்டைக் காக்கும் வாக்காக அமையட்டும். ஜனநாயகத்தைக் காக்கும் வாக்காக அமையட்டும். பாசிசத்தை வீழ்த்த - இந்தியாவை காக்க - உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன். நாற்பதும் நமதே! நாடும் நமதே! நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்றார் அவர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அண்ணாமலை மீது திமுக புகார்!