தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அண்ணாமலை மீது திமுக புகார்!

By Manikanda PrabuFirst Published Apr 5, 2024, 8:36 PM IST
Highlights

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அண்ணாமலை மீது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் அளித்துள்ளது

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. இறுதி மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முதற்கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கு வருகிற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. தேர்தல் பறக்கும் படைகள் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வாகன சோதனை உள்ளிட்ட தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கோவை பாஜக வேட்பாளரும், தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை மீது திமுக புகார் அளித்துள்ளது. திமுக  அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்துள்ள அந்த புகாரில், கோவை மக்களவைத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் ஏப்ரல் 6,7 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளன. இதற்காக வழங்கப்பட்டுள்ள நோட்டீஸில் தாமரை சின்னம், பிரதமர் மோடி, அண்ணாமலை ஆகியோரின் படங்கள் உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாகவும் என கூறப்பட்டுள்ளது.

பறக்கும் படையினரை மிரட்டிய திருப்பூர் பாஜக வேட்பாளர் முருகானந்தம் மீது வழக்குப்பதிவு!

மேலும், விளையாட்டு போட்டிகள் என்ற பெயரில் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக புகார் கூறியுள்ள ஆர்.எஸ்.பாரதி, மத்தியில் பாஜக ஆட்சி செய்வதால் அந்த அதிகாரத்தை அக்கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் அண்ணாமலை துஷ்பிரயோகம் செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ள ஆர்.எஸ்.பாரதி, அந்த விளையாட்டு போட்டிகளை நடைபெறாமல் தடுத்து நிறுத்துவதுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

click me!