மக்களவை தேர்தல்.. மத்திய சென்னையில் தயாநிதி மாறனை எதிர்கொள்ளும் பாஜக வேட்பாளர் - யார் இந்த வினோஜ் பி செல்வம்?

By Ansgar RFirst Published Mar 21, 2024, 8:38 PM IST
Highlights

BJP Chennai Central Candidate Vinoj P Selvam : மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றனர். ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி ஏழு கட்டமாக இந்த தேர்தல் நடக்க உள்ளது.

இந்நிலையில் மத்திய சென்னையில் திமுக சார்பாக தயாநிதி மாறன் களமிறங்க உள்ள நிலையில், அவரை எதிர்த்து பாஜக களமிறக்க உள்ள நபர் தான் வினோத் பி செல்வம். இவர் யார்? பாஜகவில் இவர் பங்கு என்ன? எத்தனை ஆண்டுகளாக இவர் பாஜகவோடு பயணித்து வருகின்றார் என்பது குறித்த தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

யாருங்க வினோஜ் பி செல்வம்?

சென்னையில் 1986ம் ஆண்டு பிறந்த வினோத் பி செல்வம், கடந்த 2010 ஆம் ஆண்டு சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் BA BL (Honors) படித்து முடித்துள்ளார். சென்னையில் இருக்கும் ரோகிணி ஹோட்டல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பயணித்து வரும் இவர், கடந்த 2007ம் ஆண்டு பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 

இரட்டை இலை சின்னத்தை முடக்குங்கள்; கடைசி அஸ்திரத்தை கையில் எடுத்த ஓபிஎஸ்; தப்புமா அதிமுக?

தற்பொழுது வினோத் பி செல்வம் அவர்கள் "பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின்" மாநில தலைவராக பணி செய்து வருகின்றார். "பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா" என்பது பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2007ம் இவர் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டபோது தமிழக பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (தென் சென்னை) மாவட்ட பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். 

அதன் பிறகு ஜனவரி 2010 முதல் ஜூலை 2012 வரை சென்னை பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றினார். அதன் பிறகு ஜூலை 2012 முதல் ஜூலை 2015 வரை பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் மாநில செயலாளராக பணியமர்த்தப்பட்டார். அதன் பிறகு ஜூலை 2015 முதல் ஜூன் 2016 வரை வரை பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் மாநில பொதுச் செயலாளராக இருந்த அவர், கடந்த 2016 ஆண்டு ஜூன் மாதம் முதல் தமிழக பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் மாநில தலைவராக செயல்பட்டு வருகின்றார். 

தேர்தல் களம் குறித்த விவரம்

கடந்த 2011ம் ஆண்டு கவுன்சிலர் பதவிக்காக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி, வார்டு 110ல் போட்டியிட்டார் வினோஜ் பி செல்வம்.

அதே போல கடந்த 2021ம் ஆண்டு நடைபெறும் MLA தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தார் வினோஜ் பி செல்வம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தமிழக அளவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பாஜக சார்பாக இவர் எடுத்து நடத்தி வருகின்றார். பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் சார்பாக தமிழகம் முழுவதும் தடகளம் சம்பந்தமான பல போட்டிகளை இவர் நடத்தியுள்ளார். ஐயாயிரம் பேர் பங்கேற்ற சிறப்பு கண் முகாமை தலைமையேற்று நடத்தி அதில் ஆயிரம் ஏழை மக்களுக்கு மூக்கு கண்ணாடி வழங்கி உள்ளார். 

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் 80க்கும் அதிகமான மாணவர்களுக்கு, கல்வி கட்டணம், புத்தகம் உள்ளிட்ட வகையில் சுமார் 30 லட்சம் ரூபாய் வரை உதவிகளாக செய்திருக்கிறார் வினோத் பி செல்வம். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரத்த முகாம்கள் நடத்தி சுமார் 9500 யூனிட்டுக்களுக்கும் மேலான ரத்த தேவைகளை அவர் பூர்த்தி செய்துள்ளார். 

அதேபோல வடசென்னை பகுதியில் விதவை மற்றும் ஏழை எளிய தாய்மார்களுக்கு 500 தையல் மிஷின்களை வழங்கியுள்ளார் அவர். குடிசை பகுதிகளில் சுகாதார சீர்கேட்டால் ஏற்படும் நோய்களை நீக்க, 300க்கும் மேற்பட்ட கழிவறைகளை இவர் கட்டிக் கொடுத்திருக்கிறார். தமிழகத்தில் நடைபெற்ற வேல் யாத்திரைக்கு முக்கிய பங்காற்றிய பலரில் வினோத் பி செல்வம் அவர்களும் ஒருவர். 

அவருடைய இந்த பதவி காலத்தில் பாரதிய ஜனதா யுவ மோர்சாவில் மூன்று நபர் அதிகமாக உறுப்பினர் சேர்க்கை அதிகரித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மத்திய சென்னையில் திமுகவின் தயாநிதி மாறன் அவர்களை எதிர்கொள்கிறார் வினோஜ் பி செல்வம்.

மக்களவை தேர்தல்.. முதல்வரின் முதல் பிரச்சாரக் கூட்டம் - திருச்சி சிறுகனூரில் தயாராகும் பிரம்மாண்ட விழா மேடை!

click me!