லிவிங் டூ கெதர் விவகாரம்... வழக்கு தொடர உரிமையில்லை... உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

By Narendran SFirst Published Nov 5, 2021, 4:18 PM IST
Highlights

திருமணம் செய்துக்கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் குடும்ப நல நீதிமன்றத்தை நாட எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

முந்தைய காலத்தில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஓரிடத்தில் சந்தித்து, பேசுவது என்பதே தவறாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அது சகஜம் ஆகி விட்டது. தற்போது ஆணும் பெண்ணும் திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒன்றாக வாழும் அளவிற்கு காலம் மாறிவிட்டது. அவ்வாறு வாழ்வதற்கு லிவிங் டு கெதர் என்று பெயர். ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக சேர்ந்து வசித்து பார்த்து எல்லாவிதத்திலும் ஒத்துவந்தால் சேர்ந்து வாழ்வது, இல்லாவிட்டால் பிரிந்துவிடுவதே இதன் சாரம்சம். உடல்ரீதியான புரிதல், மனரீதியான புரிதல் என ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்காக சேர்ந்து வாழ்ந்து பார்க்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இதைநோக்கிதான் இன்றைய பெரும்பாலான இளைய சமுதாயம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை நாளடைவில் அதிகமாகி கொண்டே போகிறது. இதற்கு மேலும் சில காரணங்கள் உள்ளன. இந்த நிலையில் இந்த லிவிங் டூ கெதரிலும் சில நேரங்களில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு அது நீதிமன்றம் வரை செல்கிறது. மேலும் இது குறித்த பல்வேறு வழக்குகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது குறித்து அந்தந்த மாநில நீதிமன்றங்களும் தங்கள் கருத்தை சொல்லி கொண்டுதான் வருகின்றன. இதனிடையே கடந்த 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் திருமணம் செய்து கொள்வதோ, செய்து கொள்ளாமல் இருப்பதோ ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்றும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல என்று கூறியிருந்தன.

இந்த நிலையில் திருமணம் செய்துக்கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் குடும்ப நல நீதிமன்றத்தை நாட எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் ஜோசப் என்பவரை கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டதாகவும் 2016 ஆ ம் ஆண்டு முதல் ஜோசப் தனியாக வசித்து வருவதாகவும் கூறியும் தங்களை சேர்த்து வைக்க கோரியும் கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், தனக்கும், கலைச்செல்விக்கும் திருமணம் நடக்கவில்லை எனக் கூறி, அவரது வழக்கை நிராகரிக்க கோரி ஜோசப் மனுத்தாக்கல் செய்தார். இரு மனுக்களையும் விசாரித்த கோவை நீதிமன்றம், கலைச்செல்வியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து கலைச்செல்வி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். கலைச்செல்வி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் மற்றும் நீதிபதி விஜயகுமார் அடங்கிய அமர்வு, பண பரிவர்த்தனை தொடர்பான முன் விரோதத்தால் கலைச்செல்வி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார் என்பது ஆதாரங்களில் இருந்து தெளிவாவதாக கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்ததாக குறிப்பிட்ட நீதிபதி, திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தவர்கள்,தங்களுக்குள் எழும் பிரச்சைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளார். உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு லிவிங் டுகெதரில் வாழ்பவர்களுக்கு அதிர்ச்சி அளித்ததோடு மிக முக்கியத்துவம் வாய்ந்த கருத்தாக பார்க்கப்படுகிறது.

click me!