விஜய் கூட எல்லாம் அரசியல் செய்வது துர்பாக்கியம்..! செங்கோட்டையின் நிலைகுறித்து கேசி பழனிச்சாமி குமுறல்

Published : Nov 26, 2025, 02:10 PM IST
Sengottaiyan

சுருக்கம்

முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன் வேறு கட்சிக்கு செல்லாமல் எடப்பாடி பழனிசாமியுடன் பேசி அவருடன் சேர்ந்து பயணிப்பது தான் அவருக்கு நல்லது என முன்னாள் எம்பி கேசி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் முதல் அதிமுகவில் பயணித்து வரும் முக்கிய நபர்களில் ஒருவர் செங்கோட்டையன். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இவர் பள்ளிக்கல்வித்துறை உட்பட பல்வேறு முக்கிய துறைகளுக்கு அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். மேலும் தற்போதைய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் காட்டிலும் சீனியர் என்ற அந்தஸ்தில் இருந்த செங்கோட்டையனை பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வரவேண்டும் என்று தலைமைக்கு வெளிப்படையாக கோரிக்கை வைத்த நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோருடன் பசும்பொன்னில் கூட்டாக தேருக்கு மரியாதை செலுத்தினார். இதனால் தலைமையில் கோபத்திற்கு ஆளான செங்கோட்டையன் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இதனிடையே செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணையப் போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக அவர் இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பையும் ராஜினாமா செய்துள்ளார். மேலும் அவரை வளைத்துப்போடும் முயற்சியில் திமுகவும் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் செங்கோட்டையனின் முடிவு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், “செங்கோட்டையன் அவசரப்பட்டு முடிவெடுக்காமல் எடப்பாடி பழனிசாமியுடன் பேசி அதிமுகவில் பயணிப்பது தான் அவருக்கும் நல்லது, அதிமுகவுக்கும் நல்லது. மற்ற கட்சிகளுக்கு சென்று குறிப்பாக விஜய், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து அவர் அரசியல் செய்ய வேண்டிய துர்பாக்கியம் அவருக்கு ஏற்பட்டால் அதற்காக நான் வருத்தப்படுகிறேன்.

அவர் ஒருவேளை இன்னொரு பண்ருட்டி ராமச்சந்திரனை போல் மாறலாம். விஜயகாந்துக்கு பண்ருட்டியார் எப்படி பலமாக இருந்தாரோ அப்படி இவர் இருக்கலாம். ஆனால் பண்ருட்டி ராமச்சந்திரன் சிறந்த திட்டங்களை வகுக்கக்கூடியவர். ஆனால் செங்கோட்டையன் களத்தில் இறங்கி வேலை செய்பவர். அவருக்கு இந்த முடிவு சாதமாக இருக்குமா என்பது கேள்விக்குறி தான்” என்று தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?
எழும்பூர் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!