கோடி கோடியாக கொள்ளையடிப்பதற்காக தூய்மை பணியாளர்களின் வாழ்வை பறிப்பதா..? அன்புமணி ஆவேசம்

Published : Nov 26, 2025, 01:42 PM IST
Anbumani Ramadoss

சுருக்கம்

அண்ணாநகர், தண்டையார்பேட்டையில் குப்பை அள்ளும் பணி தனியாரிடம் ஒப்படைப்பு: கோடி கோடியாக கொள்ளை அடிக்க தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதா என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் 100 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் மீதமிருக்கும் அண்ணாநகர், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களிலும் குப்பைகளை அகற்றும் பணிகளை தனியாரிடம் வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தூய்மைப் பணியாளர்களின் நலனில் எந்த அக்கறையும் இல்லாமல் தூய்மைப் பணிகளை தனியாருக்கு தாரை வார்ப்பது கண்டிக்கத்தக்கது.

சென்னை மாநகராட்சியில் இராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதை எதிர்த்து தூய்மைப் பணியாளர் அமைப்புகள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, இந்த தகவலை சென்னை மாநகராட்சி தெரிவித்திருக்கிறது. சென்னையில் தூய்மைப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக இந்தக் கொள்கை முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மாநகராட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் தான், தனியார் நிறுவனங்களின் கீழும் அதே பணியை மேற்கொள்ளப் போகிறார்கள். அவ்வாறு இருக்கும் போது, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தால் தான் தூய்மைப் பணிகள் சிறப்பாக நடைபெறும் என்றால், அது தூய்மைப் பணியாளர்களின் தவறு இல்லை; மாறாக மாநகராட்சியின் நிர்வாகத் திறமையின்மை தான்.

தூய்மைப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்படும் காரணம் உண்மையல்ல... மாறாக, அதன் மூலம் ஆட்சியாளர்கள் ஆதாயம் பார்க்கத் துடிப்பது தான் காரணம் ஆகும். ஏற்கனவே, இராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் ஒப்பந்தத்தை தனியாரிடம் வழங்கிய திமுக அரசு, அதற்காக ரூ.2300 கோடி மக்களின் வரிப்பணத்தை தனியார் நிறுவனத்திற்கு வாரிக் கொடுத்தது. இப்போது அண்ணாநகர், தண்டையார் பேட்டை மண்டலங்களுக்கான ஒப்பந்தத்தின் மூலம் இன்னும் கூடுதலான தொகையை வாரி வழங்க இருக்கும் திமுக அரசு, அதற்கான வெகுமதியை பெற்றுக்கொள்வதற்காகத் தான் இத்தனை நாடகங்களையும் அரங்கேற்றுகிறது.

ஆட்சியாளர்கள் லாபம் அடைவதற்காக தூய்மைப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும் போது, தூய்மைப் பணியாளர்களின் பணிப்பாதுகாப்பு பறிக்கப்படும்; ஊதியம் சுரண்டப்படும். ஆனால், இதைப் பற்றி ஆட்சியாளர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. குப்பை அள்ளுவதில் கூட கொள்ளை அடிப்பது தான் திமுக ஆட்சியாளர்களின் கொள்கை ஆகும்.

தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அண்ணாநகர், தண்டையார்பேட்டை மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். இராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களிலும் குப்பை அள்ளும் பணியை மாநகராட்சியே நேரடியாக மேற்கொள்ள வேண்டும்.. பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அமித்ஷா, மோடி ஒன்னு கூடி வந்தாலும் காவி நுழைய முடியாது..! திமுகவுக்காக மீண்டும் குதித்த "ஊத்தி கொடுத்த".. கோவன்
இன்னும் மழையின் ஆட்டம் முடியல! வானிலை மையம் எச்சரிக்கையும்! டெல்டா வெதர்மேனின் அப்டேட்டும்