
ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.2,438 கோடி மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அமைந்தகரை, வில்லிவாக்கம், அண்ணாநகர், திருவண்ணாமலை உள்பட 26 இடங்களில் கடந்த 2022-ம் ஆண்டு சோதனை நடத்தப்பட்டது.
பின்னர் ஆருத்ரா நிதி நிறுவனத்துடன் தொடர்புடைய பாஸ்கர், மோகன் குமார், செந்தில் குமார் உள்ளிட்டோரும், அந்நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜசேகர் என்பவரையும் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் மோசடியில் ஈடுபட்ட பணத்தை சட்டவிரோத பணிப்பரிமாற்றம் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சென்னையில் மடிப்பாக்கம், முகப்பேர் கிழக்கு, பூந்தமல்லி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களிடம் மோசடி செய்த பணத்தை எந்தெந்த நாடுகளுக்கு சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்துள்ளனர் என்பது குறித்து சோதனை முடிவில் தெரியவரும்