தமிழர்களை இழிவுபடுத்துவதையே கொள்கையா வச்சுருக்கீங்களா..? ஆளுநர் ரவிக்கு எதிராக அமைச்சர் ரகுபதி காட்டம்

Published : Nov 26, 2025, 08:00 AM IST
Ragupathy

சுருக்கம்

Minister Ragupathy: தமிழர்களை இழிவுபடுத்துவதையே ஆளுநர் ஆர்என் ரவி கொள்கையாக வைத்திருப்பாக தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்துக்களை மறுத்து விரிவான விளக்கத்தை அளித்தார். தமிழ்நாட்டில் அவதூறு பரப்புவதற்கென்றே அனுப்பப்பட்டவர் ஆளுநர் ரவி. கமலாலயத்துக்கு அனுப்பப்படவேண்டியவர் ராஜ் பவனுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார் நேற்று தனியார் தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஆளுநர் ரவி ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்கம் போல தன்னுடைய பாணியில் பேசியிருக்கின்றார். தமிழ் கலாச்சாரம், நம்முடைய பண்பாடு, மொழி இவற்றை பற்றி எல்லாம் பேசுகின்ற ஆளுநர் ரவி அவர்கள் என்ன சொல்லி இருக்கிறார் என்பதை நாம் பார்த்தாக வேண்டும்.

தமிழ்நாட்டை இழிவுபடுத்துவதையே தொழிலாக வைத்திருக்கும் ஆளுநர்

தமிழ்நாட்டை இழிவுபடுத்துவதையே தன்னுடைய தொழிலாக கொண்டிருக்கின்ற ஆளுநர் அவர்கள் அளித்த பேட்டியில் பாஜகவின் ஊதுகுழலாக முழங்கி இருக்கின்றார். திராவிடம் என்பது கற்பனை, தமிழ்நாட்டில் பீகாரிகள் அச்சுறுத்தப்பட்டனர், தமிழ்நாட்டில் மொழி சிறுபான்மையினர் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என பேட்டியில் கூறியிருக்கிறார். திராவிடம் என்பது கற்பனை என்று சொன்னால் நம்முடைய தேசிய கீதத்தில் திராவிடம் இடம் பெற்றிருக்கிறது என்பது ஆளுநர் ரவிக்கு தெரியாதா? அல்லது வங்க மொழியிலே இருக்கிறது என்கின்ற காரணத்தால் அவரால் புரிந்து கொள்ள முடியவில்லையா?

தமிழர்களை திருடர்களை போல் சித்திரிக்கின்றனர்

அடுத்து அவர் சொல்லுகிற குற்றச்சாட்டு பீகாரிகள் அச்சுறுத்தப்படுகின்றனர். இப்படித்தான் ஒரிசாவிலே தேர்தல் நடந்தது. ஒடிசாவில் தேர்தல் நடந்த நேரத்தில் அமித்ஷாவும் மோடியும் அங்கு பிரச்சாரம் செய்கின்ற பொழுது ஒடிசாவை ஒரு தமிழன் ஆள வேண்டுமா? ஒடிசாவின் சாவி தமிழ்நாட்டில் இருக்கிறது என்று தமிழர்களை திருடர்களை போல ஒரு குற்றச்சாட்டு சுமத்தினார்கள்.

தமிழர்கள் என்ன திருடர்களா? குற்றவாளிகளா? தமிழ்நாடு என்ன குற்றவாளிகள் பிறப்பிடமா? தமிழ்நாட்டிலே ஒடிசாவினுடைய சாவி இருக்கிறது என்று சொன்னால் இங்கே ஒழித்து வைக்கப்பட்டிருக்கிறதா? இப்படி மற்ற மாநிலங்களில் தமிழ்நாட்டை பற்றி பேசிவிட்டு பீகார் தேர்தலில் என்ன சொன்னார்கள்? தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பீகாரிகள் அச்சுறுத்தப்படுகின்றனர். அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுற வகையில் இருக்கிறது என்றெல்லாம் பொய்யான கட்டுக்கதைகளை அவர்கள் அவிழ்த்து விட்டார்கள்.”

வடமாநிலத்திலிருந்து அதிகாரிகள் குழு வந்து இங்கிருக்கும் பீகாரிகளிடம் ஆய்வு நடத்திய போது கூட,”பீகாரிகள் தாக்கப்படுவதாக வீடியோக்களில் வந்ததெல்லாம் வதந்தி, நாங்கள் இங்கே நன்றாக இருக்கிறோம். நாங்கள் நன்றாக நடத்தப்படுகிறோம், எங்களுக்கு நல்ல பொருளாதாரம் கிடைக்கிறது. அதன் மூலமாக எங்கள் குடும்பத்தையே நாங்கள் காப்பாற்றக்கூடிய சூழ்நிலை எங்களுக்கு இருக்கிறது" என்று தெரிவித்தார்கள்.

எனவே எங்கு போனாலும் தமிழனுக்கு எதிராக பேசுவதை இன்றைக்கு கொள்கையாக கொண்டிருக்கக்கூடியவர்கள்தான் நம்முடைய ஆளுநரும் ஒன்றிய பாஜாகவும். உடனே என்னுடைய தமிழ் பற்று தெரியாதா என்பார்கள். ஆனால் தமிழ் மொழிக்காக அவர்கள் ஒதுக்கியது 150 கோடி சமஸ்கிருதத்துக்காக அவர்கள் ஒதுக்கியது 2500 கோடி. இதுதான் தமிழ் பற்றா? இதை எல்லாம் இன்றைக்கு மக்கள் புரிந்து கொண்டாக வேண்டும் என்பதற்காகதான் நாங்கள் சொல்ல வந்திருக்கின்றோம்.

பிற மாநிலங்களுடன் நட்பு பாராட்டும் தமிழகம்

இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா மாநிலங்களோடும் நல்ல உறவோடு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில், பஞ்சாப் முதல்வர், மேற்குவங்க முதல்வர், கேரளா முதல்வர், தெலுங்கானா முதல்வர் போன்ற பல மாநில முதல்வர்களையும் அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்திய மாநிலம் தமிழ்நாடு தான். இந்தியப் பிரதமர், குடியரசுத் தலைவர், ராணுவ அமைச்சர் போன்றவர்களையும் அழைத்து வந்து இங்கே நிகழ்ச்சிகளை நடத்தியதன் மூலம், தமிழ்நாடு இந்தியாவோடு இணைந்து இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அமைதியும், நம்பிக்கையும் மிகுந்த தமிழ்நாட்டைக் கண்டு பாஜக ஏன் பயப்படுகிறது? அமைச்சர் கேள்வி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?