தேவர் சிலை முன்பு கருணாஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்... போக்குவரத்து பாதிப்பு!

Sep 24, 2018, 11:44 AM IST

எம்.எல்.ஏ. கருணாஸின் ஆதரவாளர்கள், சென்னை தேவர் சிலை முன்பு போராட்டம் நடத்துவதாக வந்த தகவலை அடுத்து அந்த பகுதியில் பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. திருவாடனை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கருணாஸ், அண்மையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டம் ஒன்றில், காவல் துறை மற்றும் முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியிருந்தார்.

 

அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில், அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். இந்த நிலையில், கருணாசின் அவதூறு பேச்சை அடுத்து, நீதிபதிமுன் ஆஜர் படுத்தப்பட்டு, ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் அடுத்து கருணாஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்த இளைஞர்கள் கண்டனம் தெரிவித்தனர். 

திருவாடானை உள்ளிட்ட இடங்களில் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கருணாஸ், நேற்று வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். கருணாசுக்கு ஆதரவாக சில கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை, சைதாப்பேட்டை, நந்தனம் சிலை அருகே உள்ள தேவர் சிலை முன்பு முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தகவல் வெளியானது. 

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நந்தனம் தேவர் சிலை அருகே பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால், அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை, தேவர் சிலை வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் அலுவலகம் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.