ஆஹா என்ன ஒரு கண்கொள்ளா காட்சி ! பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் !!

By Selvanayagam PFirst Published Apr 19, 2019, 7:15 AM IST
Highlights

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி, கடலென திரண்ட பக்தர்களின் 'கோவிந்தா' கோஷம் விண்ணை பிளக்க, வைகை ஆற்றில் இன்று காலை 5.50 மணியளவில் எழுந்தருளினார்.

சைவமும், வைணவமும் இணையும் வகையில் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்ரல் 15ல் அம்மனுக்கு பட்டாபிஷேகம், ஏப்ரல் 16ல் திக் விஜயம், ஏப்ரல் 17ல் திருக்கல்யாணம், ஏப்ரல் 18ல் தேரோட்டம் நடந்தது.

இந்நிலையில் கள்ளழகர் தங்கக்குதிரையில் அழகர் கோவிலிலிருந்து மதுரை நோக்கி ஏப்ரல் 17 ஆம் தேதி  மாலை புறப்பட்டார். மூன்று மாவடியில் நேற்று காலை 6 மணிக்கு எதிர்சேவை நடந்தது. மாலை 5:00 மணிக்கு மாநகராட்சி மைய மண்டபத்தில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் நேற்று இரவு 9:30 மணிக்கு மேல் பெருமாள் திருமஞ்சனமாகி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை சாற்றி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் கண்கொள்ளாக் காட்சியை காண லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் நேற்று நள்ளிரவு கூடினர். தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்ட கள்ளழகருக்கு இன்று அதிகாலை 2:30 மணியளவில் கருப்பண சுவாமி கோயிலில் ஆயிரம் பொன் சப்பரம் நிகழ்ச்சி நடந்தது.

பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த கள்ளழகர், வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில், பச்சைப் பட்டு உடுத்தி அதிகாலை 5.50 மணியளவில் எழுந்தருளினார். 

அப்போது கோவிந்தா முழக்கத்துடன் ஏராளமான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீச்சி அடித்து வரவேற்றனர். முன்னதாக வெள்ளைப்பட்டு உடுத்தி வெள்ளிக்குதிரையில் வந்த வீரராகவ பெருமாள், அழகரை வரவேற்றார்.

click me!