கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35-ஆக அதிகரித்துள்ளது. மேலும் உடல்நிலை குறைவால் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சில உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளச்சாராயம் விற்றது தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு சிபிசிஐக்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணையும் தொடங்கி உள்ளது. கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அரசின் அலட்சியப்போக்கே இதற்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
Kallakurichi : விஷச்சாராய மரணம்.. சட்டசபையில் மவுன அஞ்சலி.. இரங்கல் தீர்மானம்- கூட்டம் ஒத்திவைப்பு
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரத்தில் என்ன நடந்தடது என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் 18-ம் தேதி இரவு 11 மணிக்கு பிரவீண் என்பவர விஷச்சாராயம் குடித்துள்ளார். அவருக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அப்போது உறவினர்கள் பிரவீணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் மது அருந்தி இருந்ததால் சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறி பிரவீணை வீட்டிற்கு மருத்துவர்கள் அனுப்பி உள்ளனர். ஜூன் 19 அதிகாலை 2 மணிக்கு பிரவீணின் உறவினர் சுரேஷ் என்பவரும் விஷச்சாராயம் குடித்துள்ளார். அவருக்கு அதிகாலை 4 மணியளவில் வயிறு வலி. பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது.
ஆனால் அரசு மருத்துவனையில் பிரவீணை அனுமதிக்க மறுத்ததால், சுரேஷை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி காலை 7 மணியளவில் சுரேஷ் உயிரிழந்துவிட்டார். இதனிடையே ஜூன் 19 காலை 6 மணிக்கு மீண்டும் பிரவீணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் காலை 8 மணியளவில் பிரவீணும் உயிரிழந்துவிட்டார்.
ஜூன் 19ம் தேதி காலை 10 மணிக்கு மேல் தான் இந்த தகவல் ஊடகங்களில் வெளியானது. பின்னர் மாவட்ட நிர்வாகத்திற்கும் இந்த தகவல் சென்றுள்ளது. சாராயம் குடித்ததால் உடல்நல குறைவு ஏற்பட்டதாக ஒரு நபரை அரசு மருத்துவனைக்கு அழைத்து செல்லப்படும் அவர் அருந்திய சாராயத்தில் விஷம் ஏதேனும் கலந்திருக்கிறதா என்பதை அப்போது மருத்துவமனையில் இருந்த மருத்துவர் ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால் இது நடந்ததா என்பது விசாரணையில் தான் தெரியவரும்.
அதே போல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்தால் அங்கிருக்கும் காவல்துறை பதிவேட்டில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
மேலும் விஷச்சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாரா என்பதும் தெரியவில்லை.
இந்த இரண்டு உயிரிழப்புக்கு பிறகும் அங்கு விஷச்சாராயம் விற்பனை நடந்துள்ளதும், அதனை பலரும் வாங்கி அருந்தியதால் அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
விஷச்சாராயம் குடித்ததால் சுரேஷ் தான் முதலில் உயிரிழந்தார். அவரின் துக்க நிகழ்வுக்கு ஏராளமானோர் சென்ற நிலையில், அங்கும் விஷச்சாராயம் பாக்கெட்டில் விற்கபப்ட்டதாகவும், அதனை துக்க நிகழ்வுக்கு சென்ற பலர் அருந்தியதாகவும் கூறப்படுகிறது. இதுதான் பலி எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
முதலிலேயே இந்த உயிரிழப்புக்கு காரணம் சாராயம் என்று கூறியிருந்தால், சாராயம் விற்பனையும் தடுக்கப்பட்டிருக்கும். இவ்வளவு பெரிய உயிரிழப்பும் ஏற்பட்டிருக்காது.
இதனால் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி ஒரே குடும்பத்தில் 2 பேர், 3 பேர் என உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த சூழலில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் வழங்கவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ.50000 நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் நிவாரணம் மட்டுமே இதற்கு தீர்வாகாது. இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.