கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் திருட்டுத்தனமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை அப்பகுதியைச் சேர்ந்த பலரும் வாங்கி அருந்தி உள்ளனர். இதில் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நள்ளிரவு 1 மணியளவில் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக உயிரிழக்கத் தொடங்கினர்.
தற்போது வரை 120க்கும் அதிகமானோர் கள்ளக்சாராயம் குடித்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் உயிரிழப்பும் 35ஐ கடந்துள்ளது. மேலும் 15க்கும் அதிகமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் தொடர்ந்து உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்ததே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
undefined
உயிரிழப்புகள் நடைபெற நடைபெற உடல்களை தேக்கி வைக்காமல் உடனடியாக உடற்கூறாய்வு நடத்தப்பட்டு உடல்கள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை 25 நபர்களின் உடல்கள் கூறாய்வு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டு உள்ளன. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இலப்பீடாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி நகர்ப்புற பகுதியில் அசும்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க சேலம் சரக டிஐஜி உமா பார்வையில் ஏழு ஏடிஎஸ்பி தலைமையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கள்ளச்சாராயத்தை விற்பனை செய்ததாகக் கூறி கண்ணுகுட்டி (எ) கோவிந்தராஜ் அவரது மனைவி விஜயா, அவரது தம்பி தாமோதரன் ஆகிய மூவரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்துள்ளனர்.