தொடரும் கஜா பலி…. மேலும் 5 பேர் உயிரிழப்பு….இடிந்து விழுந்த வீடுகள்… முறிந்த மரங்கள்… சின்னா பின்னமான கடலூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்கள்….

By Selvanayagam PFirst Published Nov 16, 2018, 9:16 AM IST
Highlights

கஜா புயலால் கடலூர் மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்தனர். இதே போல் திருவண்ணாமலையில் கூசர் இடிந்து விழுந்து சிறுமி ஒருவரும் உயிரிழந்தார். இதையடுத்து கஜா புயலுக்கு தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

கஜா தீவிர புயலின் மையப்பகுதி நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணிக்குள் கரையை கடந்தது. கஜா புயலின் கடைசி பகுதி நாகை - வேதாரண்யம் இடையே கரையை கடந்து வருகிறது, கஜா புயல் முழுமையாக கரையை கடக்க இன்னும் 1 மணி நேரம் வரை ஆகலாம்  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கஜா தீவிர புயல் தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து, 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் என்றும்  உள்மாவட்டங்களில் புயல் செல்லும் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் கரூர், தேனி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதே போல் புயல் கரையைக் கடந்தாலும் கஜா புயலால் நாகை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  பலத்த காற்று காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. தட்டிகள், பேனர்கள், மின் கம்பங்கள் உள்ளிட்டவை காற்றில் சேதம் அடைந்தன. மீட்பு பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.  

கடலூரை பொறுத்தவரை தொடர்ந்து கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. காற்றின் வேகமும் அதிகமாக உள்ளது. பல இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. சாலையில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கடலூரில் ஒரு சில இடங்களை தவிர பெரும்பாலான இடங்களில் மின்சாரம் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன, வீட்டின் கூரைகள் காற்றில் பறந்தன. திருவண்ணாமலை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.

தஞ்சை மவாட்டம் பட்டுக்கோட்டை அருகே சிவகொல்லையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ரமேஷ், சதீஷ், அய்யாதுரை, தினேஷ்  ஆகிய 4 பேர் உயிரிந்தனர். தஞ்சை மாவட்டத்திலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செல்போன் கோபுரங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன.

கஜா புயல் காரைக்காலிலும் கோர தாண்டவம் ஆடியுள்ளது. காரைக்கால் மாவட்டத்தை பொறுத்தவரை திரும்பிய இடமெங்கும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. ஆங்காங்கே மின் கம்பங்களும் சேதம் அடைந்துள்ளன.

 கடைகளில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர தட்டிகளும் தூக்கி வீசப்பட்டன. விளம்பர பேனர்கள் உள்ளிட்டவைகள்  காற்றில் அடித்து செல்லப்பட்டன. மரங்கள் சாலைகள் மற்றும் முக்கிய வீதிகளில் விழுந்து கிடக்கின்றன.

click me!