நாங்குநேரி: 12ஆம் வகுப்பு தேர்வில் சாதித்த சாதி வெறி தாக்குதலுக்கு உள்ளான மாணவன்!

By Manikanda PrabuFirst Published May 6, 2024, 12:55 PM IST
Highlights

நாங்குநேரியில் சாதி வெறி தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னத்துரை 12ஆம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்துள்ளார்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த மாணவர் சின்னதுரையும், அவரது தங்கையும் வேறு சமூகத்தை சேர்ந்த சக மாணவர்களால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரிவாளால் வெட்டப்பட்டனர். இச்சம்பவத்தை பார்த்த அவர்களது உறவினர் கிருஷ்ணன் அதிர்ச்சியில் உயிரிழந்தார். படுகாயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, அதே பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவர்கள் 3 பேர் உள்பட மொத்தம் 7 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவரை உள்நோக்கத்தோடு கேலி, கிண்டல் செய்ததால், தலைமை ஆசிரியரிடம் புகாா் அளித்ததற்காக மாணவர் சின்னதுரையை ஆயுதங்களால் அவர்கள் தாக்கியதாக தெரியவந்தது.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதிய மனப்பான்மை உள்ளது எனும் கசப்பான உண்மை நாங்குநேரி சம்பவம் மூலம் தெரியவந்தையடுத்து, பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

சுட்டெரிக்கும் கோடை வெயில்: மதுரை அரசு மருத்துவமனையில் ஏ.சி.வார்டுகள்!

இந்த நிலையில், நாங்குநேரியில் சாதி வெறி தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னத்துரை 12ஆம் வகுப்பு தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்தாண்டு 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் உதவியாளர் (Scribe) துணையோடு தேர்வெழுதி 600க்கு 469 மதிப்பெண்கள் பெற்று மாணவர் சின்னதுரை தேர்ச்சி பெற்றுள்ளார்.


தமிழ் - 71, ஆங்கிலம் - 93, பொருளாதாரம் - 42, வணிகவியல் - 84, கணக்குப்பதிவியல் - 85 கணிப்பொறி பயன்பாடு - 94 என மொத்தம் - 469 மதிப்பெண்கள் எடுத்து  மாணவர் சின்னதுரை சாதனை படைத்துள்ளார்.

click me!