
விஜய் கட்சியில் இணைந்த ஜேப்பியார் குடும்ப வாரிசு : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. அந்த வகையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. கிளைக்கழகம் முதல் மாநில நிர்வாகம் வரை பல்வேறு பணிகளை ஒதுக்கி கொடுத்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பணிக்காக செயல்வீரர்கள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என களம் இறங்கியுள்ள விஜய்,
ஜனநாயகன் படத்தின் படிப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ள நிலையில் முழு நேர அரசியலில் இறங்கியுள்ளார்.அந்த வகையில் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்கவுள்ளார். இந்த நிலையில் பல்வேறு கட்சிகளில் இருந்த முக்கிய விஐபிக்கள் தவெகவை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 3 மாஜி எம்எல்ஏக்கள் தவெகவில் விஜய் முன்னிலையில் இணைந்தனர். மேலும் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண் ராஜ், ஓய்வு பெற்ற நீதிபதியும் இணைந்தார். இவர்களோடு சேர்ந்து ஜேப்பியார் குடும்பத்தே சேர்ந்த முக்கிய நபரும் அரசியலில் இறங்கியுள்ளார்.
Marie Wilson தமிழ்நாட்டின் பிரபல தொழிலதிபரும், கல்வியாளருமான மறைந்த டாக்டர் ஜேப்பியாரின் மருமகன் ஆவார். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பராகவும் ஜேப்பியார் அறியப்பட்டவர். அவர் தமிழக சட்டமன்றத்தில் அரசாங்க தலைமை கொறடாவாகவும் பணியாற்றியவர். தமிழ்நாட்டில் தனியார் பொறியியல் கல்வியின் முன்னோடிகளில் ஒருவராகவும், அரசியல்வாதியாகவும் இருந்துள்ளார்.
ஜேப்பியார் அமைத்த கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தில் முக்கிய பங்கு Marie Wilson வகிக்கிறார். அவர் ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராகவும், ஜேப்பியார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின் தலைவராகவும் பதவி வகிக்கிறார். ஜேப்பியாரின் மகள் ரெஜினாவின் கணவர் தான் மரிய வில்சன். இதன் மூலம் ஜேப்பியார் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். இந்த நிலையில் தான் நேற்று தவெக தலைவர் விஜய் முன்னிலையில் மரிய வில்சன் அக்கட்சியில் இணைந்துள்ளார். ஜேப்பியார் குடும்பத்தில் மீண்டும் ஒருவர் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரசியல் களத்தில் நுழைவதாகக் கருதப்படுகிறது.
ஜேப்பியார், எம்.ஜி.ஆர்-இன் அதிமுகவில் முக்கிய பங்காற்றியவர் என்பதால், மரிய வில்சனின் இந்த நகர்வு எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரையிலான அரசியல் தொடர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தில் மரிய வில்சன் பங்கு, தமிழ்நாடு அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.