
சென்னை விமானத்தின் மீது பாய்ந்த லேசர் ஒளி : நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்குவந்து செல்கிறது. இதில் பல ஆயிரம் பேர் பல கனவுகளோடும், பல திட்டங்களோடு பயணம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த சில வாரங்களாக சென்னைக்கு வரும் விமானங்ளுக்கு தொடர்ந்து அச்சறுத்தல் கொடுக்கும் நிகழ்வு நீடித்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 25ஆம் தேதி துபையில் இருந்து 326 பயணிகளுடன் சென்னைக்கு வந்த விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக மெல்ல மெல்ல கீழே இறங்கி வந்த நிலையில், அதன் மீது சக்தி வாய்ந்த லேசர் ஒளி பாய்ச்சப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் அப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ஜூன் 6ஆம் தேதி துபாயிலிருந்து 304 பேருடன் சென்னை வந்த எமிரேட்ஸ் விமானம் மீது பல வண்ண நிறங்களில் லேசர் ஒளி அடிக்கப்பட்டது. பரங்கிமலை பகுதியில் இருந்து சக்தி வாய்ந்த பச்சை நிற லேசர் ஒளி அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. யார் இந்த ஆபத்தான செயலில் ஈடுபடுவது என அப்பகுதியில் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்றும் விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிகாலை புனேவில் இருந்து ஏர் இந்தியா விமானம் சென்னை வந்துள்ளது. விமான நிலையத்தில் தரையிரங்க தயாராக இருந்த நிலையில், விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி எங்கிருந்து வெளிச்சம் வருகிறது. ஏதேனும் விமானத்திற்கு அச்சறுத்தலா.? என பதற்றம் அடைந்துள்ளார்.
இதனால் விமானம் சிறிது நேரம் வானில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. லேசர் ஒளியால் நிலை குலைந்த விமானிகள் சுதாரித்துக்கொண்டு சாமர்த்தியமாக செயல்பட்டு மீண்டும் விமானத்தை வானில் பறக்கச் செய்தனர். சிறிது நேரத்திற்கு பின்னர் மீண்டும் பத்திரமாக சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிரங்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் விமானிகள் புகார் அளிக்கப்பட்டதையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். மேலும் பெரும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பாக தவரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
விமானத்தின் மீது மர்ம வெளிச்சம் தாக்கும் போது விமானிகள் பதற்றமடையும் நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக விமானம் தரையிறங்கும் காலம் மிகவும் முக்கியமானது. அப்போது விமானத்தைத் தரையிறக்கும்போது விமானிகள் சரியான மற்றும் குறிப்பிட்ட இடத்தில் விமானத்தை இறக்க வேண்டும். எனவே விமானிகள் பல வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும், அருகில் வேறு ஏதேனும் விமானங்கள் உள்ளதா என கவனிக்க வேண்டியிருக்கும். இது போன்ற சூழ்நிலையில் விமானத்திம் மீது லேசர் ஒளிக்கற்றைகளை அடிப்பது விமானிகளைத் தடுமாறச் செய்யும். இதன் காரணமாக விமானிகள், ஓடுபாதையை விட்டு விலகித் தரையிறக்கும் அபாயமும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.