அமெரிக்க YES நிறுவனம் கோவையில் முதல் செமி கண்டக்டர் உற்பத்தி இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. இது தொழில் முனைவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு சூலூர் மற்றும் பல்லடத்தில் செமி கண்டக்டர் பூங்கா அமைக்க நிதி ஒதுக்கியுள்ளது.
Coimbatore semiconductor manufacturing : தமிழக அரசு சார்பாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். அப்பொழுது அங்கு இருந்த YES என்ற செமி கண்டக்டர் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
அந்த வகையில் 150 கோடி முதலீட்டில் YES நிறுவனம் துவங்கிய நிலையில், தனது முதல் செமி கன்டக்டர் உற்பத்தி இயந்திரத்தை வடிவமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் முதல் செமி கன்டக்னர் உற்பத்தி இயந்திரமாகும்.
கோவையில் அறிமுக நிகழ்ச்சி
சூலூரில் உள்ள YES நிறுவனத்தில் இந்தியாவின் முதல் செமி கன்டெக்டர் அறிமுக நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது. இதில் ஏராளமான தொழில் முனைவோர் ஆர்வத்துடன் இந்த முதல் செமிகன்டக்டர் உற்பத்தி இயந்திரத்தை பற்றி தெரிந்து கொண்டனர். எலக்ட்ரானிக் பொருட்களில் தரவுகளை சேகரிக்கும் முக்கிய பகுதியாக இருக்கும் செமி கண்டக்டர்கள், தென்கொரியா, அமெரிக்கா, சீனா ,ஜெர்மனி , ஜப்பான், தைவான் , இஸ்ரேல் போன்ற நாடுகளில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் தற்பொழுது அமெரிக்காவைச் சேர்ந்த YES நிறுவனம் கோவை சூலூரில் தனது நிறுவனத்தை துவங்கி செமி கண்டக்டர் தயாரிப்பு இயந்திரத்தை வடிவமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருப்பது தொழில் முனைவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல் செமிகன்டக்டர் தயாரிப்பு இயந்திரம்
தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, இந்த முதல் செமிகன்டக்டர் தயாரிப்பு இயந்திரம் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது வரவேற்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழக நிதிநிலை அறிக்கையில் சூலூர் மற்றும் பல்லடம் ஆகிய பகுதிகளில் செமி கண்டக்டர் பூங்கா அமைக்க 500 கோடி நிதி ஒதுக்கி இருப்பதை நினைவு கூர்ந்த அவர், கோவை செமி கண்டக்டர் மண்டலமாக சிறந்து விளங்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.