பொள்ளாச்சியில் பிரபல கோழிப்பண்ணை தலைமை அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பணப்பட்டுவாடாவை தடுக்கும் முனைப்பில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் நோக்கில் ஆங்காங்கே பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் இப்போது தான் வெளியே வரும் என்ற எண்ணத்தில் வருமா வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஊஞ்சவேலாம்பட்டி பகுதியில் அருள் முருகன் மற்றும் சரவண முருகன் ஆகியோரது பிரபல கோழி பண்ணை செயல்பட்டு வருகிறது. அதன் தலைமை அலுவலகம் பொள்ளாச்சி வெங்கடேச காலனியில் செயல்படுகிறது.
இந்நிலையில் இவர்களது அலுவலகம் மற்றும் பண்ணை உள்ளிட்ட நான்கு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரி சக்திவேல் தலைமையிலான குழு விடிய விடிய சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் அலுவலகத்தில் வைத்திருந்த சுமார் 32 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பறிமுதல் செய்யப்பட்ட 32 கோடி ரூபாய் பணத்தை பொள்ளாச்சியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டத்தில் கூறப்படுகிறது.