Heat Wave : கொளுத்த போகுது வெயில்..குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் வெளியே செல்ல வேண்டாம்- தமிழக அரசு

By Ajmal Khan  |  First Published Apr 9, 2024, 9:42 AM IST

அடிக்கடி வேலை நிமித்தமாக வெயிலில் செல்லும் நபர்கள், திறந்தவெளியில் வேலை செய்பவர்கள் போதிய அளவுக்கு குடிநீரை பருக வேண்டும் மேலும் ORS எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலை பருக வேண்டும் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 


அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எப்போதும் ஏப்ரல் மத்தியில் தான் வெயில் உக்கிரமாக இருக்கும் ஆனால் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில், மார்ச் மாதம் துவக்கத்தில் இருந்து வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும் வீட்டிற்குள்ளும் ஏசி இல்லாமல் இருக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

Tap to resize

Latest Videos

இதனையடுத்து  வெயிலின் தாக்கத்தில் இருந்து தம்மை காப்பாற்றி கொள்ள  தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அறிவுரை வழங்கியுள்ளது. அதில்,  தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் கூடுவதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்

குறிப்பாக தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்ப அலைகளின் தாக்கம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பொதுமக்கள் வெளியே செல்லும் பொழுதும், வீட்டில் இருக்கும் பொழுதும் தேவையான அளவிற்கு குடிநீரை பருக வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பதால் வியர்வை மூலம் நீர் இழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். வெயிலால் ஏற்படும் தாக்கம் அதிக பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ள சாலையோர வியாபாரிகள் கட்டிடத் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள். சுரங்கத் தொழிலாளர்கள் பேருந்து நடத்துனர் ஓட்டுனர் மற்றும் பயணிகள் விவசாயிகள் இணையதள வாயிலாக உணவு மற்றும் வீட்டுத் தேவை பொருட்கள் விநியோகிப்பவர்கள்.காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு பணியாளர்கள் குறிப்பாக போக்குவரத்துக் காவலர்கள் ஆகியோர் மிக கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

குழந்தைகள், முதியவர்கள் வெளியே வர வேண்டாம்

குழந்தைகள் குறிப்பாக பச்சிளம் குழந்தைகள் நோய்வாய்ப்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் வயது முதிர்ந்தோர் மற்றும் நோய்வாய் பட்டவர்கள் ஆகியோரும் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள பொது சுகாதாரத்துறை வெயிலில் வெளியே செல்ல கூடாது என அறிவுறுத்தியுள்ளது. அடிக்கடி வேலை நிமித்தமாக வெயிலில் செல்லும் நபர்கள், திறந்தவெளியில் வேலை செய்பவர்கள் போதிய அளவுக்கு குடிநீரை பருக வேண்டும்.

ORS எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலை பருகுவது நலம் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நல வாழ்வு மையங்கள்,துணை சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ORS - உப்பு சர்க்கரை கரைசல் பொதுமக்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!