தீபாவளிக்கு கொட்டித் தீர்க்கப் போகுது பெரு மழை! நேற்று ஒரு நாள் மழையில் கந்தலான சென்னை!

First Published Oct 17, 2017, 9:33 AM IST
Highlights
heavy rain on diwali day says balachandran chennai felt worst yesterday


தீபாவளி அன்று தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதன் கிழமை தீபாவளி தினத்தன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் சற்றே களை இழந்து காணப்பட்டனர். திங்கள் கிழமை காலை முதல் சென்னையின் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. மதியம் மற்றும் மாலை நேரத்தில் சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் வெள்ள நீர் சாலையில் தேங்கி நின்று போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டது. தீபாவளி நேரம் என்பதால், கடைசி கட்ட துணிமணி, பட்டாசுகள் வாங்கும் ஆர்வத்தில் சாலைகளில் சென்ற மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர். 

எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும் தி.நகர், பாண்டி பஜார், ரங்கநாதன் தெருக்களில் கால் வைக்க இடமின்றி மழை நீர் சகதி கலந்து தெருவெல்லாம் பரவியிருந்தது. இதே போன்ற நிலை நகரின் பெரும்பாலான பகுதிகளில் காணப்பட்டது. 

தென்மேற்குப் பருவ மழை காரணமாக வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சிகள் தோன்றி தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் மத்திய கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி தோன்றி வலுவடைந்துள்ளது. இதனால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை, வலுவடைந்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி செவ்வாய்க்கிழமை காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழகத்தில் இரு தினங்களுக்கு (செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை) பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்த வரை நகரின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. தற்போது புயல் எதுவும் உருவாவதற்கு வாய்ப்பில்லை” என்று கூறினார். 

நேற்று ஒரு நாள் பெய்த மழையிலேயே சென்னை கந்தலானது. இதனால் பொருள்களை வாங்கக் குவிந்த மக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் நொந்து போனார்கள். செவ்வாய்க்கிழமை இன்று ஒரு நாள் தாக்குப் பிடித்தால், வியாபாரம் ஓரளவு நன்றாக இருக்கும் என்று வியாபாரிகள் பெருமூச்சு விட்டதைக் காண முடிந்தது.

click me!