சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம், மாநில சுயாட்சியை முதலமைச்சர் நிலைநாட்டியுள்ளார் என வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் எதிராக உச்சநீதிமன்றத்தில்தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இம்மனுவின் மீதான அனைத்து தரப்பு விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன்அடங்கிய அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் வழக்கறிஞர் வில்சன் தீர்ப்பு குறித்து பல்வேறு தகவலை தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர் வில்சன் பேட்டி
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் வில்சன்: தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் கொடுக்க வேண்டும். சட்டசபையில் ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பி வைக்கும் பொழுது அதை ஆளுநர்கள் காலம் தாழ்த்தக்கூடாது. உடனடியாக ஒரு மாதத்திற்குள்ளாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆளுநர் ரவி கிடப்பில் போட்ட 10 மசோதாக்கள்.! உச்சநீதிமன்றம் ஒப்புதல்- என்னென்ன சட்ட மசோதா தெரியுமா.?
இன்று முதல் நடைமுறைக்கு வந்த மசோதாக்கள்
10 மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்டு பல்வேறு காலகட்டங்களில் அந்த மசோதாக்கள் மீது ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி வழக்கு தொடரப்பட்டது. மாநில அரசு நியமிப்பவரே வேந்தராக இருக்க வேண்டும் என்று மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பி அது காலம் தாழ்த்தப்பட்டு வந்ததால் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. இன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு இந்த வழக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. 2023 வழக்கு தாக்கல் செய்வதற்கு முன்பு இந்த மசோதாக்கள் அனுப்பப்பட்டதால் உச்ச நீதிமன்றமே இதற்கு ஒப்புதல் அளித்து அந்த பத்து மசோதாக்களும் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று உத்தரவு கொடுத்துள்ளது,
ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு
மசோதாக்கள் 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. இந்த வழக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் நலன் கருதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் சுயாட்சியை முதலமைச்சர் இந்த வழக்கின் மூலமாக நிலைநாட்டி உள்ளார்.
இதையும் படிங்க: ஆளுநர் எதிராக வழக்கு! ஆர்.என்.ரவி தன்னிச்சையாக செயல்பட முடியாது! ஒரே போடு போட்ட சுப்ரீம் கோர்ட்!
ஆளுநர் வேந்தர் பதவியில் இருந்து விடுப்பு
இனி வரும் காலங்களில் ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலம் தாழ்த்த முடியாது. ஒரு ஆளுநர் நண்பராக வழிகாட்டியாக ஆலோசகராக இருக்க வேண்டும் தடைகளை ஏற்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து ஆளுநர்களுக்கும் இந்த தீர்ப்பு பொருந்தும் இந்த தீர்ப்பின் மூலமாக இன்றிலிருந்து ஆளுநர் வேந்தர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மாநில அரசு நியமிப்பவரே வேந்தராக இருப்பார். இந்த வழக்கின் தீர்ப்பு மூலமாக குடியரசு தலைவர் நிறுத்தி வைத்துள்ள நீட் மசோதா தொடர்பாக உச்சநீதிமன்ற வழக்கு தொடர வழி வகை ஏற்பட்டுள்ளது. வழக்கு தொடர்வது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார் என்று வழக்கறிஞர் வில்சன் கூறியுள்ளார்.