தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆளுநர் எதிராக வழக்கு
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்க மறுத்து வந்தார். இச்சூழலில் ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. ஆளுநரின் பரிசீலனைக்காக அனுப்பிய 12 மசோதாக்கள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. மசோதாக்களைப் பரிசீலிக்காமல் புறக்கணிப்பதன் மூலம் ஆளுநர் தனது அரசியல் சாசனக் கடமையைச் செய்ய தவறுகிறார் என தமிழக அரசு சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.
உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
இந்த மனுவை நீதிபதிகள் பரிதிவாலா மற்றும் மகாதேவன் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதை அடுத்து இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்திவைத்தது சட்டவிரோதம். அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதும் செல்லாது.
இதையும் படிங்க: டாஸ்மாக் தொடர்பான வழக்குகள்! வேறு மாநில ஐகோர்ட்டுக்கு மாற்றமா? தலைமை நீதிபதி எடுக்க போகும் முடிவு என்ன?
ஆளுநர் தன்னிச்சையாக செயல்படி முடியாது
ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கான அதிகாரத்தின்படி நடந்து கொள்ளவில்லை. ஆளுநர் தன்னிச்சையாக செயல்படி முடியாது. அதற்கு அரசியலமைப்பு இடமளிக்கவில்லை. மாநில அரசின் ஆலோசனைபடியே செயல்பட வேண்டும். சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றிய மசோதாவை அனுப்பிய நாளிலேயே ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும். பஞ்சாப் ஆளுநர் வழக்கில், உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவான தீர்ப்பை வழங்கி உள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயம் செய்ய வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.
நடவடிக்கையை விரைவில் பின்பற்ற வேண்டும்
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில், ஆளுநருக்கு மூன்று வழிகள் உள்ளன. முதலில், ஒப்புதல் அளிப்பது. இரண்டாவது, ஒப்புதலை நிறுத்தி வைப்பது. மூன்றாவது, குடியரசுத் தலைவருக்கு ஒதுக்குவது. அரசியல் சாசன பிரிவு 200ன் படி ஆளுநருக்கு எந்த மாதிரியான முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது என்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க உள்ளோம். ஆளுநர் ஒப்புதலை நிறுத்தி வைத்தால், அவர் பிரிவு 200ன் முதல் நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கையை வெகு விரைவாக பின்பற்ற வேண்டும். முழுமையான வீட்டோ அல்லது பாக்கெட் வீட்டோ என்ற கருத்து அரசியலமைப்பில் இடம் பெறவில்லை. மசோதா ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும் போதெல்லாம், அவர் பிரிவு 200 இல் வழங்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றைப் பின்பற்ற வேண்டும், அது அவரது கடமை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.