என்னை என் கணவருடன் சேர்த்து வையுங்கள்… கரூர் எஸ்பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா!!

By Narendran SFirst Published Jul 16, 2022, 12:00 AM IST
Highlights

தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி நர்சிங் மாணவி ஒருவர் கரூர் எஸ்பி அலுவலகம் முன்பு இரவு நேரத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி நர்சிங் மாணவி ஒருவர் கரூர் எஸ்பி அலுவலகம் முன்பு இரவு நேரத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், சிந்தாமணிபட்டி பகுதியை சேர்ந்த ரேவதி என்பவர் நர்சிங் படித்து வருகிறார். இவரை சசிகுமார் என்பவர் காதல் திருமணம் செய்து மூன்று மாதத்திற்கு ரகசியமாக குடும்பம் நடத்திய பிறகு, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என காரணம் காட்டி அவரை கைவிட்டுவிட்டார். இதை அடுத்து சசிகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ரேவதி புகார் அளித்துள்ளார். ஆனால், புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் டிஎஸ்பி காலம் தாழ்த்தி வந்துள்ளார்.  இதையடுத்து நடவடிக்கை எடுக்காத டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்கவும்,  திருமணம் செய்த பிறகு சாதியை காரணம் காட்டி ஏமாற்றிய சசிகுமார் மீதும் வழக்கு பதியக்கோரி ரேவதி தனது உறவினர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இரவு நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையும் படிங்க: ஒரே நேரத்தில் 11 பெண்களுடன் குடும்பம்... சில பெண்கள் கர்ப்பம்.. போலீசையை கிறுகிறுக்க வைத்த உல்லாச மன்னன்.

இது குறித்து ரேவதி கூறுகையில், கரூரில் நர்சிங் படித்தபோது தரகம்பட்டி சசிகுமாருக்கும், எனக்கும் இடையே காதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நாங்கள் கோவை சென்று திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தோம். எனது தந்தை கொடுத்த புகாரால் எங்களை மீட்டு வந்த போலீசார், என்னை என் தந்தையுடன் ஒப்படைத்தனர். சசிகுமார் என்னை அழைத்துக் கொண்டு ஊரை விட்டு மீண்டும் வெளியேறினார். மீண்டும் எங்களை அழைத்து வந்த சசிகுமார் குடும்பத்தினர், என்னை திட்டியும், அடித்தும் துன்புறுத்தினர். அவர்களிடமிருந்து நான் தப்பி என் வீட்டிற்கு வந்தேன். காவல் நிலையத்தில் நாங்கள் இதுகுறித்து புகார் அளித்தும் வெள்ளியணை போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையும் படிங்க: திருமண ஆசையில் 14 முறை கர்ப்பமான பெண்.. கருவை கலைக்க சொல்லி காதலன் டார்ச்சர்.. விரக்தியில் விபரீத முடிவு.

எஸ்பியிடம் புகார் அளித்தோம். எஸ்பியின் உத்தரவின் படி குளித்தலை டிஎஸ்பி, வெள்ளியணை காவல் நிலையம் என்று பல காவல் நிலையங்கள் சென்றும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால் இப்பொழுது எஸ்பி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தை தொடங்கியுள்ளோம். நாங்கள் அளித்த புகாரின் பேரில் சசிகுமார் குடும்பத்தார் மீது வழக்கு பதிய வேண்டும். எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். இரவு நேரத்தில் பெண் தனது குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால்  காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து கரூர் சரக டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான போலீசார் சசிகுமார் மீது உறுதியாக வழக்குப்பதிய சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக, உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் களைந்து சென்றனர்.  

click me!