கல்லணை காவிரி ஆற்றில் மூழ்கி நால்வர் பலி; இருவர் சடலம் மட்டுமே கிடைத்தது… தேடும் பணி தீவிரம்…

First Published Oct 19, 2017, 8:23 AM IST
Highlights
Four people killed in stone The two got only the body ... the intensity of searching ...


திருச்சி

திருச்சி கல்லணை காவிரி ஆற்றில் மூழ்கிய நண்பர்கள் நால்வரில் இருவர் உடல் கிடைத்துவிட்டது. இருவர் உடல் கிடைக்கவில்லை. தீயணைப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள விமான நிலையம் அருகே உள்ள வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மகன் ஆண்ட்ரூ (19). இவர் கோயம்புத்தூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.

இந்த நிலையில் தீபாவளி விடுமுறையையொட்டி ஆண்ட்ரூ திருச்சியில் உள்ள தனது வீட்டுக்கு வந்திருந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (21). இருவரும் நெருங்கிய தோழர்கள்.

நேற்று மதியம் இவர்கள் இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த தோழர்கள் சதாம் (24), சிவா (23) உள்பட 12 பேருடன் திருச்சி கல்லணை காவிரி ஆற்றுக்குச் சென்றிருந்தனர்.

பின்னர், தோழர்கள் அனைவரும் பொன்னிடெல்டா என்ற இடத்தில் ஆற்றில் இறங்கி குளித்து மகிழ்ந்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஆண்ட்ரூ, இஸ்மாயில், சதாம், சிவா ஆகியோர் விளையாடிக் கொண்டே ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர்.

இதில் தண்ணீரில் நிலைகொள்ள முடியாமல் தத்தளித்தனர். இதனை பார்த்த அவர்களது தோழர்கள் அதிர்ச்சியில் சத்தம் போட்டனர். இதனிடையே நால்வரும் ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கல்லணை காவலாளர்கள் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரப்பர் படகு, நீச்சல் வீரர்கள் மூலம் தண்ணீரில் மூழ்கிய நால்வரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சிறிது நேர தேடுதலுக்கு பின் ஆண்ட்ரூ மற்றும் இஸ்மாயில் ஆகியோரை சடலமாக மீட்டனர். மேலும், சதாம், சிவா ஆகியோரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து கல்லணை காவலாளர்கள் வழக்குப்பதிந்து பலியான ஆண்ட்ரூ, இஸ்மாயில் ஆகியோரது உடல்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

click me!