பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை கேட்டு விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்…

First Published Oct 16, 2017, 8:08 AM IST
Highlights
Farmers road blockade fight for crop insurance compensation ...


நாகப்பட்டினம்

பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை முழுமையாக தர வேண்டும் என்று நாகப்பட்டினத்தில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள அனந்ததாண்டவபுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் 2016-ஆம் ஆண்டில் மேலமருதாந்தநல்லூர், கீழமருதாந்தநல்லூர், பொன்மாசநல்லூர் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் தொகையை செலுத்தி உள்ளனர். இவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை முழுவதுமாக வழங்கப்படவில்லை.

இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படாததால் மேலமருதாந்தநல்லூரில் ஒன்றிணைந்த விவசாயிகள் பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேத்தூர் - மயிலாடுதுறை சாலையில் நடந்த இந்தப் போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வட்டத் துணைத் தலைவர் ராஜேஷ் தலைமைத் தாங்கினார். தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்க நாகை மாவட்டத் தலைவர் எஸ்.துரைராஜ், மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின், வட்டச் செயலாளர் த.ராயர் ஆகியோர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு பேசினர்.

இந்த சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளத் என்பதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை வட்டாட்சியர் எஸ்.காந்திமதி மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் பி.கலிதீர்த்தன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள், “அனைவருக்கும் விரைவில் பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்கப்படும்” என்று விவசாயிகளுக்கு உறுதி அளித்தனர்.

இதனையேற்று விவசாயிகள் அனைவரும் மறியலைக் கைவிட்டு அங்கிருந்து அமைதியாக திரும்பிச் சென்றனர்.

 

click me!