மதுரை சொரிக்காம்பட்டியில் சமூக நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் பிரமாண்ட அசைவ விருந்தில் 10 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சொரிக்காம்பட்டி பெருமாள் கோவில்பட்டி கிராமத்தில் உள்ள கரும்பாறை முத்தையா கோவில் விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்று வருகின்றது. இவ்விழாவில் பாரம்பரிய முறைப்படி ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்று வருகின்றனர். இந்த விழாவில் பலியிடப்படுவதற்காக ஆடுகள் கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன. இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல் மற்றும் விளைநிலங்களில் உணவை தேடி செல்லும்போது முத்தையா சாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்து அந்த ஆடுகளை விரட்டமாட்டார்கள்.
இந்த ஆண்டு கரும்பாறை முத்தையா கோவில் திருவிழா இன்று காலை தொடங்கிய நிலையில் கோவிலில் சாமிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை தொடங்கிய பின்னர், நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 90 கிடாக்களும், 2000 கிலோ அரிசி மூலம் தயார் செய்யப்பட்ட அசைவ உணவு வழங்கப்பட்டது.
இந்த கறி விருந்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. இந்த விருந்தானது வாழை இலையில் சாதமும் ஆட்டுகறி குழம்பும் ஆண்களுக்கு பரிமாறப்பட்டது. இதனை சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். ஒரு வாரத்திற்கு பின்பு இலைகள் காய்ந்த பிறகே பெண்கள் கோவிலின் தரிசனத்திற்கு வருவார்கள்.
தொடர் மழை எதிரொலி; மதுரை அரசு மருத்துவமனையில் 25 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு
இந்த கறிவிருந்தில் திருமங்கலம், சொரிக்கம்பட்டி பெருமாள்கோவில்பட்டி குன்னம்பட்டி, கரடிக்கல், மாவிலிபட்டி, செக்கானூரணி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஆண் பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவானது சமூக நல்லிணக்கத்திற்காக நடத்தப்படுகிறது. குழந்தை வரம், வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியத்திற்காக நேர்த்திக்கடனுக்காக ஆடுகளை கோவிலுக்கு செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.