"2050ல் வரும் என்று எதிர்பார்த்தது இப்போதே வந்துவிட்டது" அது என்ன wet-bulb Temparature? இது ஏன் ஆபத்தானது?

Published : Jun 05, 2023, 09:56 PM ISTUpdated : Jun 05, 2023, 10:00 PM IST
"2050ல் வரும் என்று எதிர்பார்த்தது இப்போதே வந்துவிட்டது" அது என்ன wet-bulb Temparature? இது ஏன் ஆபத்தானது?

சுருக்கம்

வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது, காற்றின் ஈரப்பதமும் அதிகமாக இருந்தால் அதை வெட் பல்பு டெம்பரேச்சர் (wet-bulb temperature) என்று அழைக்கப்படுகிறது.

நாட்டின் பல இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் வெப்பநிலை 100 ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகி வருகிறது. வரும் காலங்களில் இந்த வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த சூழலில் பூவலகின் நண்பர்கள் இயக்கத்தை சேர்ந்தவரும், காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான சுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு எச்சரிக்கை பதிவை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் “எச்சரிக்கை தகவல்:   இன்று சென்னையின் "வெட்-பல்பு" வெப்பநிலை 31,3 டிகிரியை எட்டிவிட்ட்டது. பொதுவாக இது "வெப்ப அளவு" (Temperature) மற்றும் வீத ஈரப்பதம் (humidity) கொண்டு "வெட்-பல்பு" வெப்பநிலை கணக்கிடப்படுகிறது. "வெட்-பல்பு" வெப்பநிலை 30 டிகிரியை தாண்டினால் மிகவும் சிக்கலாகும். 32 டிகிரிக்கு மேல் சென்றால் சிக்கல் கூடுதலாகும், 35 டிகிரியை தொட்டுவிட்டால் உடல் தன்னை குளிர்விக்கும் தன்மையை இழந்துவிடும். இந்த பின்னணியில் "வெட்-பல்பு" நிலை 2050 வாக்கில் வரும் என்று தான் நினைத்திருந்தோம், ஆனால் இப்போதே அந்த நிலையை நெருங்குவது கவலை அளிக்கக்கூடிய அம்சம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

சரி, வெட் பல்பு டெம்பரேச்சர் என்றால் என்ன?

வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது, காற்றின் ஈரப்பதமும் அதிகமாக இருந்தால் அதை வெட் பல்பு டெம்பரேச்சர் (wet-bulb temperature) என்று அழைக்கப்படுகிறது. தமிழில் இது ஈரக்குமிழ் வெப்பநிலை என்று சொல்லப்படுகிறது. பொதுவாக மனிதர்களுக்கு வியர்வை மூலமே அவர்களின் வெப்பம் தணிகிறது. அதாவது வியர்வை ஆவியாகும் போது மனிதர்களின் வெப்பத்தை எடுத்து செல்கிறது. இதனால் மனிதர்களின் வெப்பநிலை குறைகிறது. ஆனால் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் இந்த செயல்முறை மந்தமாக இருக்கும். அதாவது காற்றில் ஏற்கனவே ஈரப்பதம் அதிகமாக இருந்தால், வியர்வை மெதுவான வேகத்தில் ஆவியாகும்.

எனவே நமது உடலின் வெப்பமும் குறையாது. ஒருக்கட்டத்தில் வெப்பமும் அதிகமாக உள்ளது, நமக்கு வியர்வையும் வரவில்லை என்றால் அது உயிரிழப்புக்கே வழிவகுக்கும். ஆய்வுகளின் படி, 35 டிகிரிக்கு மேல் வெட் பல்பு டெம்ப்ரச்சேர் இருந்தால், மனித உடலில் வியர்வை வெளியேறாது. இந்த வெப்பமான சூழலில் குளிர்சாதன வசதி இல்லை எனில் சில மணி நேரங்களில் உயிரிழக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.

நல்ல உடல் ஆரோக்கியத்துடன், அதிக நீர்ச்சத்துடன், நிழலில் கனமான ஆடைகள் அணியாத ஓய்வில் இருக்கும் நபருக்கும் இந்த வெப்பநிலை ஆபத்தானது தான். பொதுவாக வெப்பநிலையை காட்டிலும் இந்த வெட் பல்ப் டெம்பரேச்சர் நிலை குறைவாகவே இருக்கும். இது அதிகரிக்கும் போது மனிதர்களுக்கு ஆபத்தானது தான். 

பூமி வெப்பமயமாதலுக்கும் வெட் பல்பு டெம்ப்ரேச்சருக்கும் என்ன தொடர்பு?

காற்று வெப்பம் அதிகமாக இருந்தால், அதில் ஈரப்பதமும் அதிகமாக இருக்கும். எனவே உலக அளவில் வெப்பநிலை அதிகரித்தால் ஈரப்பதமும் அதிகமாகும். இதனால் வெட் பல்பு டெம்ப்ரேச்சரும் அதிகமாகும். தெற்காசியா உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே இந்த வெட் பல்பு டெம்ப்ரேச்சர் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகின் பிற பகுதிகளுக்கும் இது பரவக்கூடும். புவி வெப்பமயமாதலை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனில் இந்த சிக்கலை நீண்டகாலம் எதிர்கொள்ள நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 21 December 2025: தங்கம் மாதிரி ஏறும் முட்டை விலை! இனி ஆம்லேட் கனவுதான்.. விலை எவ்வளவு?
டெட் தேர்வில் திருப்பம்! சிறுபான்மை பள்ளிகளுக்கு இனி அந்த கவலை இல்லை.. முதல்வர் போட்ட அதிரடி கையெழுத்து!