தொடர்கதையாகும் தமிழக மீனவர்கள் துயரம்..! இலங்கை அரசிடம் பேசுங்க..! மத்திய அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!

Published : Nov 04, 2025, 08:15 PM IST
eps and modi

சுருக்கம்

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 

தமிழ்நாட்டின் ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஆழ்க‌டலில் மீன்பிடிக்க செல்கின்றனர். ஆனால் மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. தமிழ்நாடு மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினர் படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர்.

தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்

நமது மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர், இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். மீனவர்கள் கைது செய்யப்படும்பொதெல்லாம் இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதுவதும், அதற்கு ஜெய்சங்கர் பதில் கடிதம் அனுப்புவதும் வாடிக்கையாகி விட்டது. ஆனால் மீனவர்கள் கைது விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மழை விட்டும் தூவானம் விடவில்லை

இந்த நிலையில், தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக இலங்கை அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல், நமது அண்டை நாடான இலங்கையில் புதிய ஓர் ஆட்சி அமைந்த பிறகும், தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.

வன்மையாக கண்டிக்கத்தக்கது

தங்களின் வாழ்வாதாரத்திற்காக உயிரையும் பணயம் வைத்து மீன்பிடிக்கும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 31 பேரையும், அவர்களது 3 விசைப்படகுகளையும் நேற்று (3.11.2025) இலங்கை கடற்படையினர் தாக்கி கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் இத்தகைய அத்துமீறிய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

மத்திய அரசிடம் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையிலுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு, இலங்கை அரசோடு தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள அனைத்து தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளையும் வழங்க வேண்டுமென்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆடு வெட்டி புது சடங்கு உருவாக்கினது தான் பிரச்சனைக்கு காரணமே..! திருப்பரங்குன்றம் பின்னணியின் உண்மை உடைக்கும் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன்..!
காவல் நிலையத்தில் புகுந்து காவலருக்கு வெட்டு.. தமிழகத்தில் தினமும் 5 படுகொ**லை.. ஷாக் கொடுக்கும் அன்புமணி