கலவரத்தை உருவாக்கும் அன்புமணி..! குண்டர் சட்டத்தில் ஜெயிலில் போடுங்க..! ராமதாஸ் ஆவேசம்!

Published : Nov 04, 2025, 06:58 PM IST
Ramadoss Vs Anbumani

சுருக்கம்

பாமக எம்எல்ஏ அருளை தாக்கிய அன்புமணி தரப்பினரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். அன்புமணி கலவரத்தை தூண்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் பிரதான கட்சிகளின் ஒன்றான பாமக, ராமதாஸ், அன்புமணி மோதலில் சிதறிக் கிடக்கும் நிலையில், இன்று ராமதாஸ் ஆதரவாளரான பாமக எம்.எல்.ஏ அருள் தரப்பினர் மீது அன்புமணி ஆதரவாளர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்கள். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று வாழப்பாடி வழியாக திரும்பிக் கொண்டிருந்த எம்எல்ஏ அருள் காரில் 10க்கும் மேற்பட்டவர்களுடன் வந்தார்.

பாமக எம்.எல்.ஏ அருள் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

அப்போது அங்கு வந்த 50க்கும் மேற்பட்ட அன்புமணி ஆதரவாளர்கள் – காரை நடுவழியில் மறித்து தாக்குதல் நடத்தினர். இதில் எம்.எல்.ஏ அருள் உடன் இருந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, அரசியல் வட்டாரங்களை அதிர வைத்துள்ளன.

அன்புமணி மீது அருள் குற்றச்சாட்டு

இது குறித்து பேசிய அருள், ''அன்புமணி கட்சியினரை தூண்டி விட்டு என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார். அந்த கும்பல் 'அன்புமணி வாழ்க' எனக்கூறி எங்கள் மீது தாக்குதல் நடத்தியது. ராமதாஸிடம் இருந்து என்னை பிரிக்க முயற்சி நடக்கிறது. அது ஒருபோதும் நடக்காது. அமைதியான அரசியலில் ஈடுபடுவோம் எனகூறிய அன்புமணி ரவுடிகளை கட்டவிழ்த்து விட்டுள்ளார்'' என்றார்.

ராமதாஸ் கண்டனம்

இந்த நிலையில், பாமக எம்.எல்.ஏ அருள் மீதான தாக்குதலுக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ''ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெ.பி என்கிற ஜெயப்பிரகாஷ் தலைமையில் அன்புமணி ஆதரவு சட்டவிரோத கும்பல் ஒன்று கத்தி, இரும்பு பைப்புகள், கட்டைகள் போன்ற ஆயுதங்களுடன் சட்ட மன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவருடன் வந்த கட்சியினரின் 5 கார்களை வழிமறித்து. "மருத்துவர் அன்புமணி வாழ்க" என்று கோஷம் எழுப்பி கொண்டு "அய்யாவுடன் சேர்ந்து கொண்டு அன்புமணி அண்ணனுக்கு எதிராகவே அரசியல் செய்கிறீர்களாடா.." என்றும் முழங்கியவாரே கார் கண்ணாடிகளை அடித்து, உடைத்து. நொறுக்கி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வன்முறையை தூண்டும் அன்புமணி

கருத்தை, கருத்தால் எதிர்கொள்ளாமல், ஜனநாயகத்திற்கு எதிராக நடந்த இந்த தாக்குதல் நிகழ்வு கடுமையான கண்டனத்துக்குரியது. கடந்த சில நாட்களாக சேலம், அரியலூர், தர்மபுரி, தஞ்சை போன்ற மாவட்டங்களில் அன்புமணி பலரை தூண்டிவிட்டு என்னையும், என்னுடன் இருக்கும் முக்கிய பொறுப்பாளர்களையும் அவமானப்படுத்தும் வகையிலும், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வன்முறையை தூண்டி விட்டு மோதல் போக்கை உருவாக்கி வருகிறார்.

அன்புமணி நடைபயணம் தான் காரணம்

வன்முறையை தூண்டுபவர்களை அன்புமணி உற்சாகப்படுத்தி, பாராட்டி பொறுப்புகள் கொடுத்து ஊக்கப்படுத்தி வருகிறார். மேலும் அன்புமணியின் தூண்டுதலின் பேரில் பல மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மோதல்கள் நடந்து வருகிறது. அதில் சிலர் கடுமையாக தாக்கப்பட்டும் வருகின்றனர். அமைதி பூங்காவாக உள்ள தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் மீதான தாக்குதலுக்கும். கலவரத்திற்கும் காரணம் அன்புமணியின் நடைபயணம்தான்.

அருளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

அருள் மீதான இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், குண்டர்களாக செயல்பட்ட அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மேலும் சட்டமன்ற உறுப்பினர் அருள் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர் சுதந்திரமாக மக்கள் பணி செய்வதற்கும் ஏதுவாக அவருக்கு ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய குழு காவலர்கள் பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியம் ஆகும்.

அன்புமணியின் கும்பலை தடை செய்யணும்

அத்துடன், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இம்மாதிரியான, மோசமான சம்பவங்கள் நடத்தி கலவரத்தை ஏற்படுத்தலாம் என்கிற எண்ணத்தில் அன்புமணியே திட்டமிட்டு, தூண்டுதலை செய்ததே இந்த சம்பவத்திற்கு காரணம். இவ்வாறு திட்டமிட்டு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் விதமாக, என்னுடன் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினரை தாக்க வேண்டும் என்று சதி திட்டத்தோடு செயல்படும் அன்புமணியின் கும்பலை தடை செய்து, அந்த சட்ட விரோத கும்பலில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்திட வேண்டும் என காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

1000, 2000 இல்ல ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10000..! பழனிசாமி ஜாக்பாட் அறிவிப்பு..
தவெக கூறுவது அத்தனையும் பொய்! விதியை மீறிய விஜய் மீது நடவடிக்கையா? உண்மையை புட்டு புட்டு வைத்த காவல்துறை