
தமிழகத்தில் கூட்டணி
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே உள்ள நிலையில், கூட்டணி எப்படி அமையும் என பல வித கணக்குகள் அரசியல் விமர்சகர்களால் ஆராயப்படுகிறது. அந்த வகையில் திமுக கூட்டணி தற்போது வரை ஸ்டாரங்காக உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இன்னும் கட்சிகள் எதுவும் இணையவில்லை. அதே நேரம் பாஜகவும் தற்போது எந்த கூட்டணியிலும் இல்லாத நிலையில் நீடிக்கிறது. மேலும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என விஜய் அறிவித்துள்ளார். அந்த வகையில் அதிமுக- தவெக இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவெக தலைமையில் தான் கூட்டணி என அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் இணையும் அதிமுக- பாஜக
இதன் காரணமாக அதிமுக புதிய கூட்டணியை அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அதிமுக, பாமக, தேமுதிக மற்றும் பாஜகவை இணைக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பாஜகவுடன் கூட்டணியே இல்லையென கூறி வந்த அதிமுக, தற்போது கூட்டணி தொடர்பாக புதிய கருத்துகளை கூறி வருகிறது. அதன் படி கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி கூட்டணி தொடர்பாக கூறுகையில்,
இபிஎஸ் எதிர்பார்ப்பை உடைத்த அண்ணாமலை
தங்களது எதிரி திமுக மட்டுமே எனவும் மற்ற எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து தேர்தலை சந்திப்போம் என தெரிவித்திருந்தார். இதனையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது தொடர்பாகமதில் அளிக்கையில், பாஜக தீண்ட தகாத கட்சி, நோட்டோ கட்சி என விமர்சித்த கட்சிகள் தற்போது பாஜகவின் கூட்டணிக்காக தவம் இருப்பதாக தெரிவித்தார்.
சமாளிக்கும் எடப்பாடி
இந்த கருத்து அதிமுகவைத்தான் குறி வைத்து அண்ணாமலை கூறியதாக பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கையில், அதிமுகவை பெயரை குறிப்பிட்டாரா.? தவறாக பேசாதீர்கள். தயவு செய்து தவறாக பேசாதீர்கள். போட்டுக்கொடுத்து வாங்காதீங்க, ஏற்கனவே சொல்லிவிட்டேன் 6 மாத காலத்திற்கு பிறகு கூட்டணி தொடர்பாக பேசப்படும் என ஏற்கனவே தெரிவித்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதனிடையே மற்றொரு இடத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கூட்டணிக்காக தவம் கிடந்த வரலாறு அதிமுகவிற்கு கிடையாது என தெரிவித்தார்.