
Pink Auto : பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், பெண்களுக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கு பாதுகாப்பு தரும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்ந வகையில் வாகன சோதனையானது தீவிரப்படுத்தப்பட்டு குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்கப்படுகின்றனர். மேலும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் 80ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்டோக்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் சென்னை காவல்துறை சார்பாக கியூ ஆர் குறியீடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆட்டோவில் கியூ ஆர் குறியீடு
இதன் காரணமாக ஆட்டோக்கள் எந்த இடத்தில் உள்ளது. ஆட்டோவின் உரிமையாளர் யார்.? போன்ற விவரங்களை உடனடியாக கண்டறியமுடியும்.இந்த நிலையில் தமிழக அரசின் அடுத்த சூப்பர் திட்டம் தான், பிங்க் ஆட்டோ திட்டம், பெண் ஆட்டோ ஓட்டுநர்களை கௌரவிக்கும் விதமாகவும் பிங்க் ஆட்டோ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. ஆதரவற்ற கைம்பெண்கள் மற்றும் ஆரவற்ற மகளிர் நல வாரியம் மூலமாக பிங்க் ஆட்டோ திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் 250 மகளிர்களுக்கு பிங்க ஆட்டோ இன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
பிங்க் ஆட்டோ திட்டம் தொடக்கம்
கணவனை இழந்த பெண்கள், சமூகத்தில் தனியாக வாழும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களின் பொருளாதாரம், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் பெண்களுக்கான சுயதொழில் உருவாக்கும் விதமாக 250 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1 லட்சம் வங்கிக் கடன் மானியமாக வழங்கப்பட்டது. இந்த பிங்க ஆட்டோவின் மூலம் ஆட்டோக்களை பாதுகாப்பாக இயக்குவது, ஜி.பி.எஸ். கருவியின் செயல்பாடு அவசர காலங்களில் காவல்துறையை தொடர்பு கொள்வது, சுய தற்காப்பு, டிஜிட்டல் முறையில் பணம் பெறுவது, குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.