பொங்கல் பரிசு தொகுப்போடு ரூ. 5000 வழங்கிடனும்.! ஸ்டாலின் அரசுக்கு கோரிக்கை விடுத்த எடப்பாடி

By Ajmal KhanFirst Published Jan 4, 2024, 2:05 PM IST
Highlights

பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் ரூ.2,500/-போதாது என்றும், 5,000/- ரூபாய் ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் தற்போது ஆயிரம் ரூபாய் கூட அறிவிக்கவில்லையென எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 
 

பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் பரிசு தொகுப்போடு ரொக்கப்பணம் வழங்குவது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா நோய்த் தொற்றின்போது தமிழக மக்களின் வருமான இழப்பை ஈடுகட்டவும், பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தோடும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ.2,500/- வழங்கப்பட்டது. மேலும் முழு செங்கரும்பும் வழங்கப்பட்டது. அப்போது, எதிர்க்கட்சியாக இருந்த தற்போதைய முதலமைச்சர் திரு. ஸ்டாலின், பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் ரூ.2,500/-போதாது என்றும், 5,000/- ரூபாய் ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்றும் ஊடகங்களில் பேட்டியளித்தார்.

Latest Videos

அனைவருக்கும் 1000 ரூபாய் வழங்கிடுக

ஆனால், 2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரொக்கப் பரிசும் வழங்கவில்லை. உருகிய வெல்லம், பல்லி விழுந்த புளி, கலப்பட மிளகு என்று, தமிழக மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பை மட்டும் வழங்கி தமிழக மக்களின் கேலிக்கு உள்ளானார். கடந்த ஆண்டு பொங்கலின்போது, பொங்கல் தொகுப்பில் அரிசி, சர்க்கரை, கரும்புத் துண்டு, ஏலக்காயுடன் ரொக்கப் பணமாக ரூ. 1,000/- மட்டுமே வழங்கப்பட்டது.  இந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு, பொங்கல் தொகுப்பை மட்டும் விடியா அரசு அறிவித்துள்ளது. எனவே, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ.1,000/-ஐ வழங்க வேண்டும் என்றும்; 

வெள்ள பாதித்தவர்களுக்கு 5000ரூபாய்

மிக்ஜாம் புயல் மற்றும் கன மழையால் வாழ்வாதாரங்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி, சென்னை புறநகர் பகுதி மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், தென் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ. 5,000/- வழங்க வேண்டும் என வலியுறுத்துவதாக கூறியுள்ளார். எனது தலைமையிலான அம்மாவின் அரசில், பொங்கல் தொகுப்புடன் வழங்கப்பட்ட கரும்பு, விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த விடியா அரசு பொறுப்பேற்றவுடன் இடைத்தரகர்கள் மூலம் கரும்பு கொள்முதல் செய்தது. 

விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல்

இதனால் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. நான் பேட்டிகள் மற்றும் அறிக்கைகள் வாயிலாக விடியா திமுக அரசின் கரும்பு கொள்முதல் நடைமுறையை கடுமையாக எச்சரித்தேன். எனவே, இந்த ஆண்டு பொங்கல் பரிசாக வழங்கப்படும் கரும்பு கொள்முதலில் எந்தவிதமான முறைகேடுகளுக்கும் இடம் தராமல், நேரடியாக கரும்பு சாகுபடி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், கரும்புக்கான பணம் இடைத்தரகர்கள் இன்றி, நேரடியாக விவசாயிகளைச் சென்றடைய வேண்டும் என்றும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலினை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

Murasoli : கேட்ட தொகையும் கொடுக்கல.. வெறும் கையால் முழம் போட்டு, வார்த்தைகளால் வடை சுட்ட மோடி- விளாசிய முரசொலி

click me!