சாயத் தொழிற்சாலைகளை நிரந்தரமாக தடை செய்ய வேண்டி ஈரோட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு ஆர்ப்பாட்டம்…

First Published Oct 14, 2017, 8:42 AM IST
Highlights
Environmental Protection Committee demonstrated in Erode to permanently ban dye factories


ஈரோடு

சாயக்கழிவுகளை வெளியேற்றும் சாயத் தொழிற்சாலைகளை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று ஈரோட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியில் சில சாயத் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிப்புச் செய்யாமல் வெளியேற்றும் சாயக்கழிவுகள் ஓட்டக்குளம் வழியாக பசுவபட்டி பகுதிக்குள் செல்கிறது.

மேலும், அந்தக் கழிவுகள் அங்குள்ள குளம், குட்டைகளை பெரிதும் மாசுபடுத்துகிறது என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் மக்கள் பலமுறை புகார்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சாயக்கழிவுகளை சுத்திகரிப்புச் செய்யாமல் முறைகேடாக வெளியேற்றும் சாயத் தொழிற்சாலைகளை நிரந்தரமாக தடைச் செய்யக்கோரி சென்னிமலையில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு சார்பில் சென்னிமலை பேருந்து நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இளமதி அர்ச்சுனன் தலைமை வகித்தார். தி.மு.க ஒன்றிய செயலாளர் பி.செங்கோட்டையன், காங்கிரசைச் சேர்ந்த கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், “தற்சார்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த கி.வே.பொன்னையன் பங்கேற்று சாயக்கழிவுகளை முறைகேடாக வெளியேற்றும் தொழிற்சாலைகளை தடை செய்ய வேண்டும்” என வலியுறுத்திப் பேசினார். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரசு, ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புரட்சிகர விவசாயத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் இறுதியில் “சாயக்கழிவுகளை வெளியேற்றும் சாயத் தொழிற்சாலைகளை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

tags
click me!