நாளையில் இருந்து என்ட்ரி ஃபீஸ் கட்டுனாத்தான் டாஸ்மாக்கிற்குள் நுழைய முடியும் !! காண்டாகும் குடிமகன்கள் !!

By Selvanayagam PFirst Published Dec 31, 2018, 11:36 AM IST
Highlights

நாளை முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர்கள், தண்ணீர் பாக்கெட் ஆகியவை விற்பனை செய்ய முடியாமத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நஷ்டத்தைச் சரிகட்ட மது அருந்த வரும் குடிகாரர்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு  அருகிலேயே பார்கள்  இயங்கி வருகின்றன. அரசு அனுமதி பெற்ற பார்கள் 2 ஆயிரம் அளவிலும், அரசு அனுமதி பெறாத பார்கள் சுமார் 3 ஆயிரம் எண்ணிக்கையிலும் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

இதுவரை இந்த பார்களில் குடிக்க வரும் குடிகார்களுக்கு  பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இந்த 2 பொருட்களும் அரசு தடை செய்த பொருட்கள் பட்டியலில் வருவதால், இனி இதை விற்பனை செய்ய முடியாது.  இதையடுத்து கண்ணாடி டம்ளர், சில்வர் டம்ளர், தண்ணீர் பாட்டில்களைத் தான் பயன்படுத்த முடியும். இதனால், பார் உரிமையாளர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், மாவட்ட வாரியாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தலைமையில் பார் உரிமையாளர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்து எடுத்துக்கூறப்பட்டது. அப்போது, பார் உரிமையாளர்கள் தங்களுக்கு பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட் விற்பனையின் மூலமே ஓரளவு பணம் கிடைக்கும். அதை நிறுத்தினால், எங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் பார்களில் நாளை  முதல் நுழைவுக் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று வாய்மொழி உத்தரவு ஒன்றை டாஸ்மாக் அதிகாரிகள் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, நாளை முதல் டாஸ்மாக் பார்களில் ரூ.10 முதல் ரூ.20 வரை நுழைவு கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுப்பிரியர்களுக்கு கண்ணாடி டம்ளர், தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட இருக்கிறது.
 

click me!