மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை..எப்போது..? யாரெல்லாம் பெறமுடியும்..? அமைச்சர் சொன்ன தகவல்..

By Thanalakshmi VFirst Published Feb 16, 2022, 3:51 PM IST
Highlights

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைதொகை இன்னும் 2 மாதங்களில் வழங்கப்படும் என்றுவருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
 

கடந்த முறை சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் திமுக, நாங்க ஆட்சி பொறுப்பேற்றால் மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு அப்போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
ஆனால் ஆட்சிக்கு வந்த 10 மாதங்கள் ஆகியும் இந்த அறிவிப்பு பற்றி தமிழக அரசு இன்னும் எந்த உத்தரவு வெளியிடவில்லை. 

இதனால் தொடர்ந்து ஆளுங்கட்சி மீது எதிர்கட்சி விமர்சனங்களை வைத்து வருகிறது. பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டீர்கள் என்றெல்லாம் கடும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. நகர்புற தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக, பாஜக கட்சிகள் இதனை விமர்சித்து வருகின்றன.ஒரு சில வாக்குறுதிகளையே திமுக நிறைவேற்றியுள்ளதாகவும், நீட் ரத்து, மகளிருக்கான ரூ.1,000 உரிமைத் தொகை உள்ளிட்ட பல வாக்குறுதிகளை திமுக இன்னமும் நிறைவேற்றவில்லை என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து சொல்லி வருகின்றன.

இந்த சூழலில் தான் கடந்த 13-ம் தேதி திண்டுக்கல் பிரச்சாரக் கூட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது, "பெண்களுக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப் போகிறோம்... யாரையும் ஏமாற்ற மாட்டோம்" என்று உறுதி தந்திருந்தார்.இதனிடையே உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் என முதல்வர் ஸ்டாலின் படத்துடன் கூடிய விண்ணப்பங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டன.. 

இந்த விண்ணப்பங்கள் விநியோகித்து வருவதற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர்.இன்னும் திட்டமே அறிவிக்கவில்லை.அதற்குள் விண்ணப்பமா? என்று கேள்வி எழுப்பினர். 1000 ரூபாய் இந்நிலையில், பெண்களுக்கு ரூ.1000 உரிமை தொகைக்கான விண்ணப்பம் எதுவும் தரவில்லை என்று தமிழக அரசே விளக்கம் கொடுத்தது. 

இந்நிலையில் சாத்தூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன்,  விரைவில் மக்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்."தமிழகத்தில் உள்ள குடும்பத்தலைவிக்கு மட்டும் தான் 1000 ரூபாய் வழங்கப்படும்.குடும்பத்தலைவர் வந்து கேட்டால் வழங்கப்பட மாட்டாது.குடும்பத் தலைவிகளுக்கு 1000 வழங்கும் திட்டம் 2 மாதங்களில் தொடங்கப்படும்.

சாத்தூர் பகுதியில் திமுக ஆட்சியில் தான் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாளச்சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளது. அதனால், அனைவரும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

click me!