அஜித் மற்றும் தனுஷ் பட பிரபல நடிகையான மஞ்சு வாரியர் காரை தேர்தல் அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்த போது, நடிகையுடன் போட்டோ எடுக்க திரைப்பட ரசிகர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாகன சோதனை தீவிரம்
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக பறக்கும் படை அதிகாரிகள் மாநகர் புறநகர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை, மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் இரவு பகலாக சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அஜித் பட நடிகை கார் சோதனை
50ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லப்படும் பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருமானவரித்துறை விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். அந்த வகையில், திருச்சி - அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் நகர் என்ற பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரஞ்சித் குமார் தலைமையில் காவல்துறை துணை ஆய்வாளர் கவுசல்யா குழுவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கேரளா மாநிலம் பதிவு எண் கொண்ட கருப்பு நிற கார் ஒன்று வந்தது. அந்த காரை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரை ஓட்டிக் கொண்டு வந்தது. தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகையான மஞ்சு வாரியர் என தெரிய வந்தது. இதை அடுத்து அவரது விவரங்களை கேட்டுக் கொண்டே காரை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
செல்பி எடுக்க சூழ்ந்த ரசிகர்கள்
அப்போது காரில் இருப்பது அஜித்துடன் துணிவு மற்றும் தனுஷ் உடன் அசுரன் போன்ற தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த பிரபல நடிகை என தகவல் வேகமாக பரவியது. இதனையடுத்து பின்னால் நின்று கொண்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த ரசிகர்கள் அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதிகளவு ரசிகர்கள் மஞ்சுவாரியர் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பான சூழல் உருவானது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனையடுத்து மஞ்சு வாரியர் காரை வேகமாக பறக்கும் படை அதிக சோதனை செய்து விவரங்களைப் பெற்றுக் கொண்டு உடனடியாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதையும் படியுங்கள்