பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமான பாஜக பிரமுகரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கு வருகிற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதை தடுக்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு நிலைக்குழு அமைக்கப்பட்டு 3 ஷிப்டுகளாக இரவு, பகலாக தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. தேர்தல் பறக்கும் படைகள் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வாகன சோதனை உள்ளிட்ட தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், ரயிலில் பணம் கடத்தி செல்வதாக சென்னை அடுத்த தாம்பரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாம்பரம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களையும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலின் குளிர்சாதன பெட்டியில் சந்தேகத்திற்கிடமாக 3 பேர் பயணம் செய்தனர். அவர்களை விசாரித்து சோதனை செய்ததில் அவர்களிடம் 3 கோடியே தொன்னூற்று ஒன்பது லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.
போலீஸ் விசாரணையின்போது, பணத்தை கொண்டு சென்ற 3 பேர் முன்பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து, தாம்பரம் ரயில் நிலையத்தில், உரிய ஆவணங்களின்றி கொண்டுச் செல்லப்பட்ட சுமார் ரூ.3.99 கோடி ரொக்கம், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
Fact Check கங்கனா ரணாவத்துக்கு பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மூலம் பாஜகவில் சீட் கிடைத்ததா?
கைது செய்யப்பட்டவர்களின் விவரம் சதீஷ் (34), சதீஷின் தம்பி நவின் (31) மற்றும் பெருமாள் (24) என தெரியவந்துள்ளது. இதில், சதீஷ் என்பவர் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார். பாஜக உறுப்பினரான இவர், நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக பணத்தை கொண்டு செல்வதாக போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளதாக தெரிகிறது. மேலும், பெருமாள் என்பவர் நயினார் நாகேந்திரனின் உறவினர் உறவினர் என தெரியவந்துள்ளது. சென்னை சாலிகிராமத்தில் முருகன் வீட்டில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமான பாஜக பிரமுகரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமான பாஜக பிரமுகரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வருமான வரித்துறை சோதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார்.