
Duraimurugan has criticized Edappadi : வேலூர் மாவட்டம் காட்பாடியில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசின் சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு 1336 பேருக்கு சுமார் ரூ.23 கோடி மதிப்பில் வீட்டுமனைபட்டா மற்றும் தையல் எந்திரம்,மாற்று திறனாளர்களுக்கு மோட்டார் வாகனம் செயற்கை கைகால்கள் உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், எனது 50 ஆண்டுகால சட்டமன்ற உறுப்பினர் வாழ்க்கையில் இன்று தான் அதிக அளவு பட்டாக்களை நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்குகிறேன். இந்த மக்கள் பட்டா வேண்டி மரத்தடியில் அங்கும் இங்கும் வசித்தவர்கள் நிம்மதியாக வாழ 1336 பேருக்கு பட்டா வழங்குகிறேன். 23 கோடி மதிப்பீட்டில் அடுத்த வாரம் 5 ஆயிரம் பேருக்கு பொன்னை பகுதியில் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு பட்டா வழங்க இருப்பதாக தெரிவித்தார். மக்களாகிய நீங்கள் வீடு கட்டி நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் இவ்வளவு பட்டாக்களை வழங்கிய அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் முதல்வருக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன் என பேசினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், காவிரி கோதாவரி இணைப்பு பற்றி ஒன்றும் தெரியாமல் ஊர் ஊராக எடப்பாடி பழனிசாமி பேசிவருகிறார். காவிரி கோதாவரி இணைப்பு என்ன நிலைமையில் இருக்குது என்பதே எடப்பாடிக்கு தெரியாது என விமர்சித்தார். அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்தார் வேறு யாராவது திமுகவுக்கு வருவார்களா என எனக்கு தெரியாது.
ஆனால் தற்போது எடப்பாடி பழனிசாமி கடையை விரித்து வைத்துவிட்டு கூட்டணிக்கு எல்லோரையும் கூப்பிடுகிறார். ஆனால் யாரும் செல்லவில்லை அதனால் தான் எடப்பாடி வாங்க சார் வாங்க சார் என கூப்பிடுகிறார் என கிண்டலடித்தார். மருத்துவனையில அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் உடல்நிலை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் நலமாக இருப்பதாகவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.