பொள்ளாச்சி கோட்டூர் பேரூராட்சி திமுக தலைவர் ராமகிருஷ்ணன் மீது சொத்து அபகரிப்பு புகார் எழுந்துள்ளது. பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்று வீடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Pollachi property grabbing : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பேரூராட்சி தலைவராக உள்ளவர் திமுகவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், இவர் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் திமுக கவுன்சிலர்களே இவர் மீது குற்றம் சாட்டி கோட்டூர் பேரூராட்சியில் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தார்கள். மேலும் ஊராட்சி மன்ற கூட்டத்தில் இருந்தும் வெளிநடப்பு செய்து ராமகிருஷ்ணனுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.கோட்டூர் பேரூராட்சியில் திட்டங்களை உரிய முறையில் செயல்படுத்தாமல் கமிஷன் பெற்றுக்கொண்டு வேலைகள் சரியில்லை என கூறியும் பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.
திமுக ஊராட்சி தலைவர் மீது புகார்
குடிமராத்து திட்டத்தின் கீழ் ஆழியாறு அணையில் வண்டல் மண் அள்ளும் பணியிலும் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கோவை மாவட்ட ஆட்சியர் ஆழியார் அணையில் இருந்து வண்டல் மண் அள்ளுவதற்கு தடையும் விதித்தும் அப்போது உத்தரவிட்டிருந்தார். இது போன்ற பல்வேறு சர்ச்சையில் சிக்கிய திமுக ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் தற்போது பெண் ஒருவரின் சொத்தை அபகரிக்க முயன்றதும், இதன் காரணமாக அந்த பெண் வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் தற்கொலை முயற்சி
கோட்டூர் பேரூராட்சியின் தலைவர் ராமகிருஷ்ணனுக்கு நெருங்கிய உறவுக்கார பெண்மணி ஒருவரிடம் உள்ள சொத்துக்களை அனைத்தையும் எழுதி வாங்கும் நோக்கத்தோடு அந்தப் பெண்மணிக்கு பல தொந்தரவுகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த பெண்மணி காவல் அதிகாரிக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும் தனது தற்கொலைக்கு ராம் தான் காரணம் என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.